அமீரகத்தில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பானது இன்று ஏறக்குறைய 300 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 19, 2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 285 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 744,137 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு எவரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,151 ஆக இருக்கின்றது.
கடந்த ஒரு நாளில் மட்டும் 131 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 738,636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் அபுதாபியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபி பயணிப்பவர்களுக்கு EDE ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.