இந்திய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா..?? கவனம்..!!

உலகெங்கிலும் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ளது. மூன்றாம் அலை, ஒமிக்ரான் பரவல் என எப்படி கூறினாலும் இந்த பாதிப்பானது பல்வேறு நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது.

ஏற்கெனவே கொரோனாவின் இரண்டு அலைகளை கடந்து வந்த நாம், அது தந்த பாதிப்பினை இன்னும் மறக்காமல் உள்ளோம். எங்கோ, யாருக்கோ கொரோனா என்று கூறி வந்த நாம், பின் தெரிந்தவர்களுக்கு, குடும்ப உறுப்பினருக்கு, எனக்கு கொரோனா பாதிப்பு என்று கூட சொல்லும் நிலையை வைத்து விட்டது கொரோனா பரவல்.

அதிலிருந்து நாம் மீண்டு வந்து விட்ட போதிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட்டு விடவில்லை. கடந்த சில நாட்கள் முன்னர் வரை, அவ்வளவுதான்.. கொரோனா ஓய்ந்துவிட்டது… என இருக்க மீண்டும் உத்வேகம் எடுத்துள்ளது கொரோனா எனும் கொடிய பிசாசு.

இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மீண்டு கொண்டிருந்த நாம் தற்பொழுது திரும்பவும் மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்த கொரோனா பாதிப்பால் பயணத்தடை என்றால் என்னவென்றே தெரியாத பலரும் ஆண்டு விடுமுறைக்கும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சொந்த ஊர் சென்று விட்ட பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட பயணத்தடையால் வேலையின்றி, சம்பளமின்றி, அடுத்து என்ன செய்வதென்றே புரியாமல் தத்தளித்தனர்.

பயணத்தடையால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக வேலை இழந்த பலரும் தற்பொழுது வரை பழைய நிலைக்கு மீண்டு வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதனை நினைவில் கூர்ந்து, வெளிநாடுகளில் இருந்து இந்த கொரோனா பரவலுக்கு மத்தியில் சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்கள் மிக நன்றாக யோசித்து பயணத்திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உலகில் மீண்டும் கொரோனா தொற்று தணியும் வரை முடிந்த வரை நீங்கள் சொந்த ஊர் செலவதற்கான பயணத்தை தள்ளிப் போடுவது சிறந்தது.

ஒமிக்ரான் பரவல் அதிகரித்த காரணத்தால் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயணத்தடையை விதித்துள்ளது ஹாங்காங். இந்த பயணத்தடையை மற்ற நாடுகளும் விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதால் வெளிநாடுகளில் வேலை புரியும் சகோதர, சகோதரிகள் இதற்கேற்றவாறு தங்களின் பயணத்திட்டத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

அருகில் இருந்து குடும்பத்துடன் ஒன்றுகூட முடியவில்லை என  வருந்துவதைவிட மனதால் ஒன்றிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம். கொரோனாவோ.. ஒமிக்ரானோ.. எதுவாகினும் விரட்டியடிப்போம்..

அனைவரின் நலத்தையும் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு பதிவிடுகிறது கலீஜ் தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!