அமீரக சட்டங்கள்

விபத்து நடந்த இடங்களில் கூடியவர்களுக்கு 1000 திர்ஹம் அபராதம் வழங்கிய துபாய் போலீஸ்..!! சமூக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள எமிரேட்களில் ஏதேனும் விபத்து நடந்தால், விபத்து நடந்த இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதையும், காயமடைந்தவர்களை படங்கள் அல்லது வீடியோ எடுப்பதையும் தவிர்க்குமாறு அமீரக காவல்துறையினர் சமூக உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு செய்தால் UAE ஃபெடரல் சட்டத்தின்படி அவர்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

விபத்து நடந்த இடங்களை சுற்றி ஒன்று கூடுவது பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு, குறிப்பாக ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் அந்த இடத்திற்குச் செல்வதில் சிரமத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அனுமதியின்றி இறந்த உடல்கள் அல்லது காயமடைந்தவர்களின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி தண்டனைக்குரியது என்றும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் சைஃப் மொஹைர் அல் மஸ்ரூய் கூறுகையில், விபத்து நடந்த இடங்களைச் சுற்றி கூடிய பல பார்வையாளர்களுக்கு காவல்துறையினர் சமீபத்தில் 1,000 திர்ஹம் அபராதம் வழங்கியதாக கூறியுள்ளார். கூட்டம் கூடுவது மற்றும் மொபைல் போன்களில் படம் பிடிப்பதற்கு பதிலாக பொதுமக்களுக்கு உதவி வழங்கவும், நேர்மறையான வழியில் காவல்துறைக்கு ஒத்துழைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சில பார்வையாளர்கள் விபத்து நடந்த காட்சிகளை மொபைல் கேமராக்களில் படம்பிடித்து மற்றவர்களிடையே அந்த படங்களை பரப்புகிறார்கள், இது பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையை மீறுவதுடன் போலீஸ் விசாரணையை மோசமாக பாதிக்கும் என்றும் அல் மஸ்ரூய் கூறியுள்ளார்.

அதே போன்று காவல்துறை நடவடிக்கைகளின் துணை இயக்குநர் ஜெனரலும், ஷார்ஜா காவல்துறையின் துணைத் தளபதியுமான இப்ராஹிம் மோஸ்பே கூறுகையில், அனுமதியின்றி புகைப்படங்களை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகளை மக்கள் உணரத் தவறிவிடுகிறார்கள், ஆனால் நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட படங்களை முதலில் யார் பதிவிட்டது அல்லது பரப்பியது என்பதை கண்டறிய வழி உள்ளது, அப்படி புகைப்படங்களை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம், அனைத்து எமிரேட்களிலும் உள்ள போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறைகளுடன் ஒருங்கிணைந்து ‘கூட்டம் கூடுவதில் ஜாக்கிரதை’ என்ற தலைப்பில் விபத்து நடந்த இடங்களில் கூட்டம் கூடுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூக உறுப்பினர்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!