ADVERTISEMENT

அமீரகத்தில் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக ‘குளோபல் வில்லேஜ்’ தற்காலிகமாக மூடல்..!!

Published: 2 Jan 2022, 12:13 PM |
Updated: 2 Jan 2022, 12:18 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று காலை முதலே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வானிலை நிலையற்று காணப்படுகிறது. இதன் காரணமாக துபாயின் குளோபல் வில்லேஜ் இன்று ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 2 ஒருநாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

குளோபல் வில்லேஜிற்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்கள் மற்றும் நிர்வாக குழுக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குளோபல் வில்லேஜ் நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது. மேலும் இந்த முடிவானது தேசிய வானிலை ஆய்வு மையத்துடன் (NCM) ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

இன்று ஒருநாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படும் குளோபல் வில்லேஜ் நாளை திங்கட்கிழமை, ஜனவரி 3, மாலை 4 மணி முதல் பார்வையாளர்களை வரவேற்கும் வகையில் நுழைவு வாயில்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பெய்த கனமழை காரணமாக தெருக்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழை காரணமாக பள்ளத்தாக்கில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மல்லிகா சாலை மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

அமீரகத்தில் நீடித்து வரும் இந்த நிலையற்ற வானிலை காரணமாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் இன்று அமீரகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த நிலையற்ற வானிலை வியாழன் வரை தொடரும் என்றும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள், சில கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று தீவிரமான மழை பெய்யும் என்றும், மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT