துபாயில் நடந்த வாகன விபத்து ஒன்றில் பரிதாபமாக உரிழந்த ஒரு நபரை அடையாளம் காண துபாய் காவல்துறை இன்று திங்கள்கிழமை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
துபாயின் அல் பர்ஷா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் அந்த நபர் உயிரிழந்ததாகவும், அந்த நபரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் துபாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நபரை காணவில்லை என இதுவரையிலும் யாரும் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வாகன விபத்தினால் இறந்த இந்த நபரை அடையாளம் காண உதவும் எந்தவொரு தகவலையும் குடியிருப்பாளர்கள் துபாய் காவல்துறையின் கால் சென்டருக்கு (04) 901 என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே போன்று ஜனவரி 27 ம் தேதி அன்றும், பர் துபாய் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த அடையாள ஆவணங்களும் இல்லாமல் இறந்து கிடந்த மற்றொரு ஆப்பிரிக்க நாட்டவரை அடையாளம் காண துபாய் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
