அமீரக செய்திகள்

துபாய்: விசிட் விசாவில் வேலை தேடி வந்தவர்களை குறிவைத்து பணமோசடி செய்த போலி ஆட்சேர்ப்பு நிறுவனம்..!! காவல்துறையினர் எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடி புதிதாக விசிட் விசாவில் வந்தவர்களை குறிவைத்து போலி ஆட்சேர்ப்பு நிறுவனம் பணமோசடி செய்த சம்பவம் ஒன்று துபாயில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மோசடி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்கள் அளித்த புகாரின் பேரில் தற்போது துபாய் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசிட் விசாவில் வேலை தேடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த 60 பேர், வேலை வாங்கி தருவதாக கூறிய ஒரு போலி ஆட்சேர்ப்பு நிறுவனத்திடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு மாதம் ஆகியும் அவர்களுக்கு வேலை வாங்கி தருவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பணம் கொடுத்தவர்கள் கடந்த வாரம் துபாயில் உள்ள அல் முராக்காபத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட அல் முராக்காபத் காவல் நிலையத்தின் இயக்குனர் பிரிக் அலி கானெம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கும் போலி ஆன்லைன் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு பணத்தை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வேலைக்கு சேர எந்தவொரு தகுதியும் அனுபவமும் தேவையில்லை என்றும், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த போலி விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த போலி விளம்பரத்தில், “விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக பாதுகாவலர் பணிக்கு 2,200 திர்ஹமும் மற்றும் மேற்பார்வையாளர் பணிக்காக 4,000 திர்ஹமும் வழங்கப்படும், விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தேராவில் உள்ள பணியமர்த்தல் நிறுவன அலுவலகத்தில் தங்களுக்கான கோப்புகளைத் திறக்க வேண்டும், பாதுகாவலர் பணிகளுக்கு விண்ணப்பித்தால் 1,800 திர்ஹம்ஸ் கட்டணமாகவும், மேற்பார்வையாளர் பணிகளுக்கு விண்ணப்பித்தால் 3,000 திர்ஹம்ஸ் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்” என கூறப்பட்டிருந்ததாக பிரிக் அலி கானெம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அந்த நிறுவனம் திறக்கப்பட்டிருப்பதும், அதன் வணிக உரிம நடைமுறைகளை கூட அந்த நிறுவனம் இன்னும் முடிக்கவில்லை என்பதும் தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதன் உரிமையாளர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதையும் மேற்கண்ட விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூறும் போது, அமீரகத்தில் வேலை தேடுபவர்கள் தாங்கள் அணுகும் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆட்சேர்ப்புக்கு கட்டணம் வசூலிக்கும் ஏஜென்சிகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதே போன்று வேலை வாங்கி தருவதாக கூறி தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த கூறும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களிடமிருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!