அமீரக செய்திகள்

அமீரகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறைகள் என்ன..??

இந்தியா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்து வேலைக்காக கடல் தாண்டி ஐக்கிய அரபு அமீரகம் வந்த நாம், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப இன்ஜினியரிங், ஹெல்த்கேர், எஜுகேஷன், ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறோம்.

எனினும் வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு ஏற்றவாறும், மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்பவும் வரக்கூடிய காலங்களில் இந்த மாதிரியான துறைகள் தவிர்த்து வேறு சில துறைகள் அதிக முக்கியத்துவம் பெறலாம். அதற்கேற்ப நாமும் வரும் காலங்களில் தேவை அதிகம் இருக்கக்கூடிய துறைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றாற்போல் நம்மை தயார்படுத்தி கொள்வது அத்தியாவசியமான ஒன்று.

அவ்வாறு அடுத்த 10 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் எந்த மாதிரியான துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படும், எந்தந்த துறைகளுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் என்பது பற்றிய வீடியோ தொகுப்பு ஒன்றை அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அது பற்றிய சிறு தொகுப்பை கீழே காண்போம்.

அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகள்..

MOHRE அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டில், “UAE தொழிலாளர் சந்தை விரைவான தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் நவீன நுட்பங்களின் விளைவாக நிலையான மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமீரகத்தில் வேலைகள் என்னவாக இருக்கும்? என்ற கேள்வியுடன் கீழ்கண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை,

  • விஞ்ஞானிகள் (Scientists)
  • தரவு ஆய்வாளர்கள் (Data analysts)
  • இயந்திர கற்றல் நிபுணர்கள் (Machine learning specialists)
  • செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் (Artificial intelligence specialists)
  • மின்வணிகம் மற்றும் உத்திகள் வல்லுநர்கள் (Ecommerce and strategies specialists)
  • பெரிய தரவு வல்லுநர்கள் (Big data specialists)

MOHRE வெளியிட்டிருக்கும் இந்த பட்டியலின்படி, ஐக்கிய அரபு அமீரகம் இனி வரக் கூடிய காலங்களில் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்தும் என்பது தெரியவந்துள்ளது. இது பற்றி வல்லுநர்கள் கூறும்போது, இந்த மாதிரியான துறைகளில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு கணினி அறிவியல், இயற்பியல், சைபர்நெட்டிக்ஸ், வேதியியல் அல்லது ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் PhD முடித்திருத்தல் அவசியமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

HAYS டெக்னாலஜியின் மூத்த ஆட்சேர்ப்பு ஆலோசகர் பில்லி பில்டன் என்பவர் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் நிறைய நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன, பெரும்பாலான நிறுவனங்கள் ஆன்லைனில் அணுகக்கூடியதாகி விட்டது, பல நிறுவனங்கள் மெட்டாடேட்டா பகுப்பாய்வு (metadata analytics) மற்றும் இயந்திர கற்றல் அடிப்படையில் வெவ்வேறு தரவுக் கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான அணுகலைக் கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த வேலைகளில் பெரும்பாலானவற்றிற்கு, உங்களுக்கு ஒருவித அளவு மற்றும் பகுப்பாய்வு பின்னணி தேவைப்படும், அங்கு நீங்கள் கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத தரவை பகுப்பாய்வு செய்வதற்கும் சேகரிப்பதற்கும் தேவையான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு ஆழமான கற்றல் (deep learning), வலுவூட்டல் கற்றல் (reinforcement learning) மற்றும் இயந்திர கற்றல் (machine learning) போன்ற பல்வேறு தரவு தொகுதிகள் மற்றும் நுட்பங்களை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய சிறந்த வல்லுநராக இருத்தல் வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் இவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம், மேலும் இத்தகைய படிப்பில் முதுகலை பட்டம் (master degree) அல்லது முனைவர் பட்டம் (PhD) பெற்றவரை வேலைக்கு பணியமர்த்த விரும்பலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!