ADVERTISEMENT

அமீரகத்தில் தொடரும் நிலையற்ற வானிலை.. நாடு முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!

Published: 2 Jan 2022, 10:15 AM |
Updated: 2 Jan 2022, 10:23 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு துவங்கியதில் இருந்து இடி, மின்னல், மழை என வானிலை நிலவி வருகிறது. இன்று காலை கூட அபுதாபி, துபாய் மற்றும் ராஸ் அல் கைமாவின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் குடியிருப்பாளர்கள் நாட்டின் சில பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் அதிக மழை, இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையை எதிர்பார்க்கலாம் என அமீரகத்தின் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது. இது வார இறுதியில் படிப்படியாக குறையும் என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, அமீரகம் முழுவதும் வானம் ஓரளவு மேகமூட்டமாக குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேக மூட்டமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு அமீரகத்தில் உருவாகியுள்ள வெப்பச்சலன மேகங்கள் மற்றும் நிலையற்ற வானிலையே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கடல் பகுதி முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

மேலும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தூசி நிறைந்த வானிலை பதிவாகியுள்ளன. இதனால் NCM நாடு முழுவதும் தூசிக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் இந்த நிலையற்ற வானிலை காரணமாக வாகன ஓட்டிகள் கவனமாக சாலையில் செல்ல வேண்டும் என்றும், தூசி நிறைந்த வானிலை பார்வைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அலர்ஜியால் அவதிப்படுபவர்களும் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்களையும், கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடியிருப்பாளர்களை வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.