அபுதாபியில் நேற்று இரண்டு இடங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் தலைநகர் சனாவை குறிவைத்து, சவூதி தலைமையிலான கூட்டணி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமீரகத்தின் வெளியிறவுத்துறை அமைச்சகம் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் நடந்த இந்த தாக்குதலை கண்டித்ததுடன் இது தண்டிக்கப்படாமல் போகாது என்றும் உறுதியளித்த சில மணி நேரங்களில் சவூதி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேலும், சனாவில் விமானப்படை 24 மணி நேர வான்வழி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அங்குள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக ஹவுதி போராளிகள் முகாம்கள் இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும் சவூதி தலைமையிலான கூட்டணி கூறியுள்ளது.
#عاجل #التحالف: بدء ضربات جوية متفرقة لمعاقل ومعسكرات الحوثيين بالعاصمة صنعاء.#واس_عام
— واس العام (@SPAregions) January 18, 2022
திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஏமனில் சட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டணியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல் மல்கி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது இடங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இந்தச் செயலைச் செய்தவர்கள் பொறுப்புக்கூறப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
திங்களன்று இந்த கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், ஹவுதி பயங்கரவாத போராளிகளின் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் அது உறுதியளித்துள்ளது.
#عاجل #التحالف: القوات الجوية للتحالف تنفذ عمليات جوية على مدار ٢٤ ساعة فوق العاصمة صنعاء.#واس_عام
— واس العام (@SPAregions) January 17, 2022