அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் இனி போலியான சோசியல் மீடியா அக்கவுண்ட், ஈமெயில், வெப்சைட் உருவாக்கினால் கடும் தண்டனை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி வேறு ஒரு நபரின் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்குவதோ அல்லது மின்னஞ்சல்கள் தொடங்குவதோ அல்லது அரசாங்க நிறுவனங்களின் பெயரில் போலியான இணையதளங்களை தொடங்குவதோ புதிய சைபர் கிரைம் சட்டத்தின்படி மிகப்பெரிய குற்றமாகும். இந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2 மில்லியன் திர்ஹம்கள் வரை அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

2012 இன் பெடரல் சட்டம் 5, சைபர் கிரைம் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆன்லைனில் செய்யப்படும் குற்றங்களை உள்ளடக்கிய பெரிய திருத்தங்களை 2021 இன் புதிய ஃபெடரல் ஆணைச் சட்டம் எண் 34 அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டம் மின்னஞ்சல் மோசடி அல்லது மோசடி நோக்கங்களுக்காக சமூக ஊடக வலைத்தளங்களில் மற்றவர்களைப் போல் போலி கணக்குகளை தொடங்கி ஆள்மாறாட்டம் செய்வதற்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்துவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 2 முதல் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட திருத்தத்தின் 11வது பிரிவின் படி, பிறரைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு இணையதளம், சமூக வலைத்தளத்தில் அக்கவுண்ட் அல்லது மின்னஞ்சல் ஐடியை உருவாக்கும் எவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 50,000 திர்ஹம்ஸ் முதல் 200,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

புதிய சட்ட திருத்தத்தின் 5வது பிரிவின் படி, அரசு நிறுவனம் அல்லது முக்கிய வசதிகளின் இணையதளத்தை வேண்டுமென்றே சேதப்படுத்தினால், இடைநிறுத்தினால் அல்லது நிறுத்தினால் சிறைத்தண்டனை மற்றும் 500,000 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதே போன்று அரசு நிறுவனத்தின் பெயரில் ஒரு நபர் சமூக ஊடக கணக்கு, மின்னஞ்சல் அல்லது வலைத்தளத்தை உருவாக்கி அதை குற்றத்திற்காக பயன்படுத்தினால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 200,000 முதல் 2 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்த புதிய சட்டம் குறித்து அமீரகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஒருவர் கூறுகையில், மோசடி செய்பவர்கள் பொது நபர்களை குறிவைத்து அவர்களின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி, பின்தொடர்பவர்களை வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் கவரும் வகையில் பயன்படுத்துகிறார்கள். மேலும் பிறரை பிளாக்மெயில் செய்வதற்கான குற்றங்களிலும் இதே முறையை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்ட திருத்தம் குறித்து அமீரகத்தை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அல் நஜார் என்பவர் தெரிவிக்கையில், கடுமையான தண்டனைகள் அவதூறு பரப்புவதற்காக அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அல்லது விளையாட்டாக இதுபோன்ற குற்றங்களைச் செய்வதிலிருந்து மக்களைத் தடுக்கும். ஒரு சிலர் இது சட்டப்படி குற்றம் என்று தெரியாமல் தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்களை குறிவைத்து பல்வேறு ஆன்லைன் மோசடிகள் அவ்வப்போது நடைபெற்று கொண்டுதான் வருகிறது. அதிலும் அமீரகத்திற்கு வேலை தேடி விசிட்டில் வரக்கூடிய நபர்களை குறிவைத்தும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. குறிப்பாக வேலை தேடுபவர்களை கவர்ந்திழுப்பதற்காக அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற நிறுவனங்களின் பெயரில் போலி கணக்குகளை சிலர் உருவாக்கி பண மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!