ADVERTISEMENT

அபுதாபியில் நடந்த டிரோன் தாக்குதலுக்கு அமீரகம் கடும் கண்டனம்.. தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என உறுதி..!!

Published: 17 Jan 2022, 9:50 PM |
Updated: 17 Jan 2022, 9:50 PM |
Posted By: admin

அபுதாபியில் இன்று காலை இரு வெவ்வேறு இடங்களில் நடந்த தீவிபத்திற்கு டிரோன் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுவந்த நிலையில், அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம், ஐக்கிய அரபு அமீரக மண்ணில் நடந்த இந்த தாக்குதலை கண்டித்ததுடன், அது தண்டிக்கப்படாமல் போகாது என்று உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் இந்த தாக்குதல் குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றவியல் சம்பவத்திற்கு பதிலளிக்கும் உரிமையை ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி, ஹூதி போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் “கொடூரமான குற்றம்” என்றும் அந்த அறிக்கையில் அமைச்சகம் விவரித்துள்ளது.

மேலும் இந்த குழு தொடர்ந்து பயங்கரவாதத்தையும் குழப்பத்தையும் பிராந்தியத்தில் பரப்பி அமைதியை சீர்குலைப்பதாக அமைச்சகம் கூறியதுடன் பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த பயங்கரவாத செயல்களை கண்டிக்குமாறு சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள முஸாஃபா பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் டேங்கர் வெடிப்பிற்கும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட சிறிய தீவிபத்திற்கும் இந்த தாக்குதலே காரணம் என அறியப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், ஆறு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், பெட்ரோலிய டேங்கர் வெடிப்பில் பலியான இரண்டு இந்தியர்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தது.