அபுதாபியை நோக்கி இன்று காலை ஹவுதி (houthi) கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் போர் விமானங்கள் அபுதாபியை நோக்கி ராக்கெட்டுகளை ஏவ பயன்படுத்தப்பட்ட லாஞ்சர்களை தாக்கி அழித்துள்ளன.
ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவிற்கு வெளியே அபுதாபியிலிருந்து தென்மேற்கே சுமார் 1,400 கிமீ தொலைவில் உள்ள அல் ஜாஃப் என்ற இடத்தில் அமீரகத்தின் F-16 ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலின் காட்சிகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் லாஞ்சர் இரண்டு பாலிஸ்டிக் ராக்கெட்டுகளை (ballistic missiles) அபுதாபியை நோக்கி செலுத்திய சிறிது நேரத்திலேயே, அதிகாலை 4.10 மணிக்கு இந்த எதிர்தாக்குதல் நடந்ததுள்ளது. மேலும் அபுதாபியை நோக்கி செலுத்தப்பட்ட இரண்டு ராக்கெட்டுகளும் வான் பாதுகாப்புப் படையினரால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி மீதான தாக்குதல் முயற்சியானது நடுவானில் முறயடிக்கப்பட்டதால், இடைமறித்து அழிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளின் பாகங்கள் அபுதாபியை சுற்றியுள்ள தனித்தனி பகுதிகளில் விழுந்ததாகவும் இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் அதிகாலை 4.15 மணியளவில் நடந்ததாகவும், அப்போது வானத்தில் மின்னல்கள் போன்று காணப்பட்டதாகவும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.