அமீரகத்தில் பள்ளி பேருந்து மோதியதில் 12 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஜ்மான் காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அஜ்மானில் செவ்வாய்கிழமை மாலை 3.45 மணியளவில் நடந்துள்ளது. இறந்த சிறுமி உம் அம்மார் பள்ளியின் மாணவி ஆவார். வளைகுடா நாட்டைச் சேர்ந்த இந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து முன்னே சென்றுள்ளார்.
டிரைவர் அச்சிறுமியை கண்டுகொள்ளாமல் குழந்தை மீது பேருந்தை மோதியதில், அச்சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து, காவல்துறை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்துள்ளனர். இருந்தபோதிலும், அவர்கள் அங்கு செல்வதற்குள் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பேருந்தை ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பேருந்தில் கண்காணிப்பாளர் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமீரகத்தில் பள்ளி மாணவி உயிரிழந்ததிற்கு முக்கிய அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.