இந்திய செய்திகள்

இந்தியா: பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த அரசு.. PCR சோதனை, தனிமைப்படுத்தல் இனி தேவையில்லை….!! பயண வழிகாட்டுதல்கள் என்ன..??

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து விமான பயணிகளுக்கு பல்வேறு நெறிமுறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது தொற்று வீதத்தை பொறுத்து நெறிமுறைகள் நீக்கப்பட்டும் திருத்தப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் தற்பொழுது இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளுக்கான பயண நெறிமுறைகளை திருத்தம் செய்து பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவிற்குப் பிறகான பயண நெறிமுறையில் மிகப் பெரிய தளர்வாக பிப்ரவரி 14 முதல் 82 நாடுகளில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைப் பதிவேற்றும் பயணிகளுக்கு சில தளர்வுகளை அரசு வழங்குகிறது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 14 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இதனை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா பரவும் அபாயம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை அகற்றி, அதற்குப் பதிலாக முதன்மை தடுப்பூசி அட்டவணை நிறைவுச் சான்றிதழை பதிவேற்ற அனுமதிக்கப்படும் நாடுகளின் மற்றொரு பட்டியலை (82 நாடுகளின் பட்டியல்) வெளியிட்டுள்ளது.

இதில் மலேசியா, ஓமான், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், மாலத்தீவுகள், நியூசிலாந்து, நெதர்லாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 82 நாடுகளின் பட்டியலில் குவைத்தும் ஐக்கிய அரபு அமீரகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பயணிகள் இந்தியாவை அடைந்ததும் ஏழு நாள் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் 8 ஆம் நாளில் கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

விமான பயணத்திற்கு முன்

அனைத்து பயணிகளும் ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் (https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration) திட்டமிடப்பட்ட பயணம், கடந்த 14 நாட்கள் பயண விவரங்கள் உட்பட முழுமையான மற்றும் உண்மைத் தகவலை சுய அறிவிப்புப் படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

எதிர்மறையான Covid-19 RT-PCR அறிக்கையைப் பதிவேற்றவும். (பயணத்தை மேற்கொள்வதற்கு 72 மணிநேரத்திற்குள் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்) அல்லது கொரோனா தடுப்பூசியின் முழு முதன்மை தடுப்பூசி அட்டவணையை (82 நாடுகள்) முடித்ததற்கான சான்றிதழைப் பதிவேற்றவும்.

விமான பயணத்திற்குப் பின்

கொரோனா பரவும் ஆபத்தில் உள்ள நாடுகள் என்ற வகைப்படுத்தல் இல்லாமல், விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கான செயல்முறை எளிதாகிறது.

அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கிரீனிங் மேற்கொள்ளப்படும். சோதனை நேர்மறையாக இருந்தால், அவர்களின் தொடர்புகள் வரையறுக்கப்பட்ட நெறிமுறையின்படி அடையாளம் காணப்பட்டு அதற்கடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

விமானத்தில் உள்ள மொத்த பயணிகளில் 2% பேர் விமான நிலையத்திற்கு வந்தவுடன் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஒவ்வொரு விமானத்திலும் இத்தகைய பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களால் (முன்னுரிமை வெவ்வேறு நாடுகளிலிருந்து) அடையாளம் காணப்படுவார்கள்.

அவர்கள் மாதிரிகளை சமர்ப்பித்ததும் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய பயணிகளுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டால், அவர்களின் மாதிரிகள் INSACOG ஆய்வக நெட்வொர்க்கில் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும். வகுக்கப்பட்ட நிலையான நெறிமுறையின்படி அவர்கள் சிகிச்சை மேற்கொள்ளப்படும் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்தியாவை அடைந்ததும் 14 நாட்களுக்கு அனைத்து பயணிகளும் தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும். சுய-சுகாதாரக் கண்காணிப்பில் உள்ள பயணிகள், கொரோனா நோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்தால், அவர்கள் உடனடியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் அல்லது தேசிய உதவி எண் (1075)/ மாநில உதவி எண்ணை அழைக்க வேண்டும். எட்டாம் நாள் கொரோனா சோதனை செய்ய வேண்டியதில்லை.

ஒவ்வொரு பயணியும் அறிக்கையின் நம்பகத்தன்மையைப் பொறுத்து ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஏதேனும் குழறுபடி கண்டறியப்பட்டால் குற்றவியல் வழக்குக்கு பொறுப்பாவார்கள்.

மேலும் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மூலம் இந்தியாவை அடைந்தபின் வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தல் அல்லது சுய-சுகாதாரக் கண்காணிப்புக்கு உட்படுவது குறித்த எந்தவொரு தேவைக்கும் உரிய அரசாங்க அதிகாரியின் முடிவிற்குக் கட்டுப்படுவார்கள் என்று போர்ட்டலில் உறுதிமொழி கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!