வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தங்கள் பயணங்களுக்கு முன்னதாக PCR பரிசோதனையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமீரகத்தின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் (NCEMA) நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமீரகம் வரும் பயணிகள் 48 மணி நேரத்தில் பெறப்பட்ட எதிர்மறை PCR சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்தது. தற்போது அதற்கு பதிலாக, தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் QR குறியீட்டைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், தடுப்பூசி போடப்படாத நபர்கள் தங்கள் பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட PCR பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தடுப்பூசி போடப்படாத நபர்கள், பயணத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்டதற்கான சான்றிதழை QR குறியீட்டுடன் சமர்ப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகள், அந்த நாடுகள் மற்றும் இடங்களுக்கான நடைமுறைகள் மற்றும் தடுப்பூசிகளின் தேவைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் அறிவித்துள்ள இந்த தளர்வானது வரும் மார்ச் மாதம் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.