அமீரக சட்டங்கள்

UAE: தொழிலாளர்களின் நலனுக்காக புதிய ஆணை வெளியிட்ட அமீரக அரசு..!! தங்குமிடம் வழங்கவும் உத்தரவு.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமானத் தளங்களில் பணிபுரிய கூடிய தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கவும் அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 16) புதிய ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய ஆணையின்படி, 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில், பணிபுரியக்கூடிய ஒவ்வொரு தொழிலாளியின் ஊதியமும் மாதம் 1,500 க்கும் குறைவாக இருந்தால், நிறுவன முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தங்குமிடத்தை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட தொழில் நிறுவனங்கள், பணியிடத்தில் ஏற்படும் பல்வேறு ஆபத்துகளிலிருந்து தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய கட்டுமானத் தளங்களில் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நடைமுறைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதனை உறுதி செய்ய சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

பணியிடத்தில் ஏற்படும் காயங்களில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க அவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பொருத்தமான ஆடைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், முதலுதவி பெட்டிகள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகள் கட்டுமான வளாகத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் முதலாளிகளுக்கு அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் போது தொழிலாளர்களுக்கு முதலுதவி வழங்குவதற்காக கட்டுமான தளத்தில் ஒரு முதலுதவி அளிக்கும் நிபுணர் பணியில் இருக்க வேண்டும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டுளளது.

அதே போன்று பணியிடத்தில் கூர்மையான பொருட்கள், வெடிக்கும் அல்லது எரியக்கூடிய பொருட்கள், எலக்ட்ரிக் சர்க்யூட் மற்றும் அழுத்தப்பட்ட வாயுக்கள் போன்ற காயங்கள், நோய்கள் அல்லது ஏதேனும் ஆபத்துகளுக்கு வித்திடும் காரணிகளிலிருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலாளிகள் எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

கட்டுமான தளத்தில் பணிபுரியும் முன், வேலை செய்யும் போது ஏற்பட வாய்ப்புள்ள அபாயங்கள் குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் தடுப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் மீட்பு உதவிக்குறிப்புகளை தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அரபு மற்றும் பிற மொழிகளில் உள்ள சைன்போர்டுகளில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் முதலாளிகளுக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள கட்டுமான தளங்களில் வழக்கமான அடிப்படையில் ஆய்வுச் சோதனைகள் நடத்தப்படும் என்றும், மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும் கட்டுமானத்துறை சார்ந்த பணியிடத்தில் பணி ஸ்திரத்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளில், பணியாளர்கள் மற்றும் முதலாளிகளின் பொறுப்புகளை விவரிப்பதை நோக்கமாக கொண்டே இந்த புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து முதலாளியால் சரியான முறையில் விளக்கப்பட்ட பிறகு எல்லா நேரங்களிலும் அதை தொழிலாளர்கள் பின்பற்றுவதற்கும் சட்டப்படி கடமைப்பட்டுள்ளனர். மேலும் வேலை செய்யும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அபராதம் விதிக்கும் உரிமையையும் புதிய தொழிலாளர் சட்டம் முதலாளிகளுக்கு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!