இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்ட பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்பு RT-PCR சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது பயணப் புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் பயணிகளுக்கான அதன் புதிய வழிகாட்டுதலில், “இந்தியாவில் இரண்டு டோஸ்களின் முழு தடுப்பூசி அட்டவணையை முடித்த” நபர்களுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு என்றும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் அல்லது டூரிஸ்ட் விசாவில் வந்தவர்களுக்கு இந்த புதிய பயணப் புதுப்பிப்பு பெரும்பாலும் பயனளிக்கும் என கூறப்படுகின்றது.
ஆனால் பயணிகள் இந்த பயனைப் பெற இந்தியாவில் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஏர் சுவிதா போர்ட்டலில் (https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration) பதிவேற்ற வேண்டும்.
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் தரையிறங்கும் பயணிகளுக்கு ஏழு நாள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற பயணிகள், அதாவது, அமீரகத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் அமீரகத்திலேயே தடுப்பூசி போட்டிருப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு விமானம் செல்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு PCR பரிசோதனை செய்ய வேண்டும்.
இது பற்றி விமான நிறுவனம் வெளியிட்ட தகவலில், “மற்ற அனைத்து பயணிகளும் எதிர்மறையான கொரோனாவின் RT-PCR சான்றிதழை எடுத்துக்கொண்டு அதை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். புறப்படுவதற்கு திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அனைத்து பயணிகளும் ஏர் சுவிதா போர்ட்டலில் கடந்த 14 நாட்களின் பயண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் சுய அறிவிப்பு படிவத்தை பதிவேற்ற வேண்டும். மேற்கண்ட விதிகளுக்கு இணங்கத் தவறும் பயணிகள் ஏறுவதற்கு மறுக்கப்படுவார்கள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.