இந்தியா, இலங்கையில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் நபர்கள் பயணத்திற்கு முன் மேற்கொள்ள வேண்டிய ரேபிட் PCR சோதனையை இனி எடுக்க வேண்டியதில்லை என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண முகவர்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில், விமானம் புறப்படும் ஆறு மணி நேரத்திற்குள் நான்கு நாடுகளில் இருக்கும் புறப்படும் விமான நிலையங்களில் ரேபிட் சோதனைக்கான தேவையை அதிகாரிகள் குறிப்பிடவில்லை என கூறப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையின்படி, பிப்ரவரி 22 முதல், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறையான முடிவு தேவை மற்றும் அவர்கள் துபாய்க்கு வந்ததும் மற்றுமொரு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் ரேபிட் PCR சோதனை தேவை குறிப்பிடப்படவில்லை.
இதே போன்று flydubai இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு ரேபிட் PCR சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கின்றன. இருப்பினும் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இன்னும் இந்த புதிய மாற்றங்கள் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக, கொல்கத்தாவில் இருந்து துபாய்க்கு நேரடி விமானங்கள் மூலம் எமிரேட்ஸ், ஃப்ளைதுபாய், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோவில் பயணிக்கும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ரேபிட் PCR சோதனை தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.