ஷார்ஜாவின் பட்ஜெட் கேரியரான ஏர் அரேபியா இந்தியா, இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகளுக்கான ரேபிட் RT-PCR சோதனைத் தேவையை ரத்து செய்துள்ளது என்று விமான நிறுவனம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கான ரேபிட் PCR சோதனையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தற்பொழுது இந்த புதிய தகவல் வெளிவந்துள்ளன.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கென்யா, நேபாளம், பங்களாதேஷ், எகிப்து மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து ஷார்ஜாவிற்கு வரும் பயணிகளுக்கான ரேபிட் PCR சோதனைத் தேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் அரேபியா தனது புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளின் பட்டியலில் அறிவித்துள்ளது.
மேலும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் உட்பட ஏர் அரேபியாவில் பயணிக்கும் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கோவிட்-19 PCR பரிசோதனையின் எதிர்மறை முடிவைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பயணிகள் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி விமான நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிமுறைகளில் “பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் மற்றொரு PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். எனினும் விமானம் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தில் ரேபிட் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
இருப்பினும், அனைத்து ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களும் புறப்படுவதற்கு முன் செல்லுபடியாகும் ICA/ GDRFA அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா, இலங்கை, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சோதனை முடிவுகள், QR குறியீடுகளை வைத்திருக்க வேண்டும்.
ஏர் இந்தியாவின் வளைகுடா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய மேலாளர் பிபி சிங் இது பற்றி விவரிக்கையில், “துபாய்க்கு பயணம் செய்வதற்காக இந்தியாவில் இருந்து புறப்படும் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ரேபிட் PCR சோதனைகள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்தும் இதே போன்ற உறுதிப்படுத்தல்கள் வந்துள்ளன” என கூறியுள்ளார்.
மேலும், “புதிய உத்தரவுகள் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் வரவேற்கத்தக்க அறிகுறியாகும். அத்துடன் இது அமீரகத்தின் சுற்றுலாத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்தும். பயணத் துறைக்கு நல்ல காலம் மீண்டும் வரும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது, “இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன் பயணத்திற்கு முந்தைய PCR சோதனை தேவையில்லாத நாடுகளின் பட்டியலில் அமீரகத்தை இந்தியா விரைவில் சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 10 அன்று, இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாட்டிற்கான பயண நெறிமுறைகளை மறுசீரமைத்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதில், 87 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன் மேற்கொள்ள வேண்டிய கட்டாய RT-PCR சோதனையை ரத்து செய்துள்ளது. இந்த 87 நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.