ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது நான்காம் முறையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நான்காவது தாக்குதல் புதன்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்டதாகவும் அப்போது நாட்டின் வான்வெளியில் ஊடுருவிய ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மூன்று ஆளில்லா விமானங்களை (hostile drones) பாதுகாப்பு அமைச்சகம் இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட விமானங்களின் பாகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து தொலைவில் பாதுகாப்பாக விழுந்ததாக அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து அமைச்சகம் தெரிவிக்கையில் “எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்க முழு தயார்நிலையை” உறுதிப்படுத்தியதோடு, “எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகமதைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஜனவரி 17 ல் நடத்தப்பட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டு முறை ஏவுகணைகள் அமீரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட போது அமீரகமானது அதை இடைமறித்து அழித்தது. இந்த நிலையில், தற்போது நான்காம் முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமீரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமீரகத்திற்கு ஆதரவாக துணை நிற்கும் விதமாகவும் அமெரிக்கா அதன் போர் விமானங்களையும் போர்க்கப்பலையும் அமீரகத்திற்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பிற்கு தனது நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஐந்தாம் தலைமுறை போர் விமானம் மற்றும் USS கோல் என்ற போர்க்கப்பல் உதவும் என்று அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
மேலும் அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள USS கோல் போர்க்கப்பலானது அபுதாபியில் நிலை நிறுத்தப்படுவதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படையுடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த போர்க்கப்பலானது அதிவேகமாக செல்ல கூடிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் ஏஜிஸ் பாதுகாப்பு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.