ADVERTISEMENT

ஹவுதி தொடர் தாக்குதல் எதிரொலி.. அமீரகத்தின் பாதுகாப்பிற்கு போர் விமானங்கள், போர்க்கப்பலை அனுப்பும் அமெரிக்கா..!!

Published: 3 Feb 2022, 8:42 AM |
Updated: 3 Feb 2022, 8:46 AM |
Posted By: admin

ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது நடத்தப்பட்ட மூன்று தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமீரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமீரகத்திற்கு ஆதரவாக துணை நிற்கும் விதமாகவும் அமெரிக்கா அதன் போர் விமானங்களையும் போர்க்கப்பலையும் அமீரகத்திற்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பிற்கு தனது நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஐந்தாம் தலைமுறை போர் விமானம் மற்றும் USS கோல் என்ற போர்க்கப்பல் உதவும் என்று அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.

மேலும் அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள USS கோல் போர்க்கப்பலானது அபுதாபியில் நிலை நிறுத்தப்படுவதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படையுடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த போர்க்கப்பலானது அதிவேகமாக செல்ல கூடிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் ஏஜிஸ் பாதுகாப்பு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அதேபோன்று அமெரிக்காவின் விமான படை விமானங்களான லாக்ஹீட் மார்ட்டின் F-22 ராப்டார் மற்றும் F-35 லைட்னிங் II போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானமும் அமீரகத்தின் வான் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இதில் எந்த வகையை சார்ந்த விமானம் அனுப்பி வைக்கப்படும் என்பது குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

அமீரகத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களுடனான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி 1 ம் தேதி செவ்வாய்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் லாயிட் ஆஸ்டின் கூறிய இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அமெரிக்காவின் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது, “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆதரவாக பாதுகாப்புத் துறை எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை செயலாளர் மதிப்பாய்வு செய்தார். முன்கூட்டிய எச்சரிக்கை நுண்ணறிவைத் தொடர்ந்து வழங்குதல், வான் பாதுகாப்பில் ஒத்துழைத்தல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படையுடன் அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்பான் USS கோலை கூட்டாளியாக அனுப்புதல் ஆகியவை அடங்கும்” என்றார்.

மேலும் “தற்போதைய அச்சுறுத்தலுக்கு எதிராக அமீரகத்திற்கு உதவ ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை நிலைநிறுத்துவதற்கான தனது முடிவையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால மூலோபாய பங்காளியாக அமெரிக்கா நிற்கிறது என்பதற்கான தெளிவான சிக்னலையும் பாதுகாப்பு துறை செயலாளர் அபுதாபியின் பட்டத்து இளவரசரிடம் தெரிவித்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமீரகத்துடனான தனது பாதுகாப்பு உறவை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும், எங்கள் நலன்கள் மற்றும் எங்கள் கூட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்க அவர்களுக்கு உதவுவதற்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து இதை கண்காணித்து வருகிறோம் என்றும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அமீரகத்தின் தலைநகரான அபுதாபி மீது ஜனவரி 17 அன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உயிரிழந்தனர், மேலும் அந்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து ஜனவரி 24 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அமீரகம் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அமீரகத்தின் வான் பாதுகாப்பு படையினரால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் இந்த இரண்டு தாக்குதல்களிலும் எந்த உயிரிழப்பும், சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.