அமீரகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் ரமலான் மாதம் துவங்கவிருக்கும் நிலையில் ரமலான் மாதத்தில் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு விதிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா தொற்றை தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு பின் அமீரகத்தில் இஃப்தார் டென்ட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நெறிமுறைகளானது தராவீஹ் மற்றும் பிற தொழுகைகளின் போது மசூதிகளுக்குள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) புதன்கிழமை ஒரு ஊடக சந்திப்பின் போது இந்த பாதுகாப்பு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. அவை
– மசூதிகளில் வழிபாடு செய்பவர்களுக்கு கேன் தண்ணீர் விநியோகிக்கப்படலாம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு வருட ரமலான் மாதங்களிலும் இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
– ரமலான் மாதம் முழுவதும் மசூதிகளில் தராவீஹ் தொழுகைகள் நடத்தப்படலாம், மற்றும் கடைசி 10 நாட்களில் தஹஜ்ஜுத் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படும்.
– தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் உள்ளிட்ட தொழுகைகளை நிறைவேற்றும் போது வழிபாட்டாளர்கள் ஒரு மீட்டர் தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.
– இஷாவிற்கான அஸான் (தொழுகைக்கான முதல் அழைப்பு) மற்றும் இகாமா (இரண்டாவது அழைப்பு) இடையே 20 நிமிடங்கள் இடைவெளி இருக்கும்.
– மசூதிகளில் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கான மொத்த கால அளவு 45 நிமிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
– இஷா தொழுகை முடிந்த உடனேயே தராவீஹ் தொழுகை தொடங்கும்.
– தஹஜ்ஜுத் தொழுகையின் காலம் 45 நிமிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது