அமீரக செய்திகள்

துபாயில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை.. தற்போதைய விலை நிலவரம் என்ன?

உலகளவில் தங்கத்திற்கு பெயர் பெற்ற நகரங்களில் ஒன்று துபாய். அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் முதல் சுற்றுலாவாக வரும் வெளிநாட்டவர்கள் வரை என பெரும்பாலானவர்கள், இங்கு தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். எனவேதான், துபாயில் தங்க விற்பனை மற்ற நாடுகளை விடவும் ஆண்டுதோரும் கணிசமாக உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. துபாய் ஜூவல்லரி குழுமம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக அதிகரித்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, நேற்று வெள்ளிக்கிழமையன்று கிராம் ஒன்றுக்கு எட்டு திர்ஹம்ஸ் வரை அதிகரிப்பைச் சந்தித்துள்ளது.

அதேசமயம், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பு மாதமான மார்ச் மாதத்தில் மட்டும் அமீரகத்தில் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு 17 திர்ஹம் வரை உயர்ந்துள்ளதாகவும் தங்க விற்பனையாளர்களும், கொள்முதல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விலை உயர்வானது வரவிருக்கும் ஏப்ரல் மாதத்திலும் தொடரும் எனவும், உலகளவில் தங்கத்திற்கு நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் மத்திய வங்கிகளின் அதிக கொள்முதல் ஆகியவையே இந்த கடும் விலை உயர்வுக்கு காரணம் என்றும் துறை சாரந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் முழுவதும் துபாய் உட்பட அமீரகம் எங்கும் தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது மற்றும் அமீரக சந்தையில் இன்றைய விலை நிலவரம் என்ன என்பது போன்ற விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

24 காரட் வகை தங்கம் வாரத்தின் தொடக்கத்தில் கிராம் ஒன்றுக்கு 262.5 திர்ஹம்ஸ்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், கிடுகிடுவென எட்டு திர்ஹம்ஸ் உயர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 270.5 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், 22 காரட் தங்கமானது ஒரு கிராம் 250.5 திர்ஹம்ஸ் ஆகவும், 21 காரட் தங்கமானது 242.5 திர்ஹம்ஸ் ஆகவும் மற்றும் 18 காரட் தங்கமானது 207.75 திர்ஹம்ஸ் ஆகவும் தற்போது அமீரகத்தில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இவை தவிர, வாரத்தின் தொடக்கத்தில் 2,172 டாலருக்கு வர்த்தகமான ஒரு கிராம் ஸ்பாட் கோல்ட் (spot gold), இப்போது சுமார் 2,232.75 டாலராக உயர்ந்துள்ளது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் மத்திய வங்கிகள் இந்த ஆண்டு வட்டி விகிதக் குறைப்புகளைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் தங்கத்தின் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!