அமீரக செய்திகள்

துபாயில் இன்று ஏற்பட்ட சாலை விபத்து: ஒருவர் உயிரிழப்பு மற்றும் 5 பேர் காயம்..

துபாயில் உள்ள ஷேக் முகமது பின் சையத் சாலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு ஓட்டுநர் உயிரிழந்துள்ளார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

துபாயில் இன்று ஏற்பட்ட விபத்தானது இரண்டு டிரக்குகள் மற்றும் நான்கு இலகு ரக வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்டதாகவும் இந்த விபத்தானது டெயில்கேட்டிங் (tailgate) எனப்படும் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை வைத்திருக்கத் தவறியதன் காரணமாக ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கத் தவறியதால், முன்னால் சென்ற பேருந்து மீது டிரக் மோதியதாகவும் பின்னர், அது சிமெண்ட் மற்றும் செங்கற்கள் ஏற்றப்பட்ட மற்றொரு டிரக் மீது மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்துத் துறையின் ஜெனரல் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி இது பற்றி தெரிவிக்கையில் “அல் ரஷிதியா பிரிட்ஜிற்குப் பின் ஷேக் முகமது பின் சையத் சாலையில் இரண்டு டிரக்குகள் மற்றும் நான்கு இலகுரக வாகனங்களுக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது என்ற புகாரைப் பெற்ற பிறகு நாங்கள் எங்கள் ரோந்துப் படையினரை அனுப்பினோம். இந்த விபத்தானது சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது” என்று  தெரிவித்துள்ளார்.

மேலும் டெயில்கேட்டிங் செய்வது போக்குவரத்து விபத்துகளுக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, போக்குவரத்து துறை டெயில்கேட்டிங் விதிகளை மீறுவதால் 538 விபத்துகளைப் பதிவு செய்துள்ளது. இதில் 10 பேர் இறந்துள்ளனர் மற்றும் 367 பேர் காயமடைந்துள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் டெயில்கேட்டிங் செய்வதற்கு வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் நான்கு ப்ளாக் பாய்ண்ட்ஸ் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!