தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள தகவலின்படி, சனிக்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாகச் சீரான ஆனால் தூசி நிறைந்த வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், நாட்டின் சில பகுதிகளில் வீசும் பலமான காற்று தூசியையும் மணலையும் கிளப்பக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தாழ்வான மேகங்கள் உருவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், காற்று லேசானது முதல் மிதமானதாக இருக்கும், ஆனால் அவ்வப்போது பலமாக வீசக்கூடும் என்றும், பலமான காற்றினால் தூசி மற்றும் மணல் வீசுவதன் காரணமாக, திறந்தவெளிகள் மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் பார்வைத்திறன் (visibility) குறையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வெப்பநிலை நிலவரங்களைப் பொறுத்தவரை, உட்புற பகுதிகளில் வெப்பநிலை 39°C முதல் 46°C வரையிலும், கடலோர மற்றும் தீவுப் பகுதிகளில் 36°C முதல் 41°C வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் வெப்பநிலை 32°C முதல் 37°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை, குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஒப்பு ஈரப்பதம் (relative humidity) 90 சதவீதம் வரை உயரக்கூடும், இது சில கடலோரப் பகுதிகளில் மூடுபனி மற்றும் பனிமூட்டம் உருவாவதற்கான சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையை எதிர்நோக்குகையில், வெப்பநிலை படிப்படியாக உயரும். அதேவேளையில் இரவு மற்றும் திங்கட்கிழமை அதிகாலை நேரங்களில் ஈரப்பதமான சூழல் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய நாளில் காற்று லேசானது முதல் மிதமானதாக இருக்கும், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ வரை பலமாக வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வானிலை பொதுவாகச் சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவ்வப்போது வடமேற்குத் திசையிலிருந்து பலமான காற்று வீசக்கூடும், இதனால் சில பகுதிகளில் தூசி பரவலாம் என்று NCM கூறியுள்ளது.
குறிப்பாகப் பகல் நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
கடல் நிலவரம்
- அரேபிய வளைகுடா: ஞாயிற்றுக்கிழமையன்று கடல் நிலை லேசானது முதல் மிதமானதாக இருக்கும். திங்கட்கிழமை முதல், குறிப்பாக இரவு நேரங்களில், கடல் சீற்றமானதாக மாறக்கூடும்.
- ஓமன் கடல்: முன்னறிவிப்பு காலத்தில் முழுவதும் கடல் நிலை லேசானது முதல் மிதமானதாகவே இருக்கும்.
NCM வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வரும் நாட்களில் தூசியான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், குறைந்த பார்வைத்திறன் கொண்ட பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அடுத்த வாரத் தொடக்கத்தில் அரேபிய வளைகுடாவில் கடல் கொந்தளிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்பவர்கள் வானிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel