அமீரக செய்திகள்

UAE: கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்த அபுதாபி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாக கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதில் கூடுதலாக தற்போது கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தளர்த்தும் வகையில், அபுதாபியில் வணிக மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் அபுதாபியில் நடக்கும் நிகழ்வுகளில் EDE மற்றும் தெர்மல் ஸ்கேனர்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அபுதாபியில் உள்ள வணிக வளாகங்கள் உட்பட பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழைவதற்கு AlHosn செயலியில் உள்ள Green Pass தொடர்ந்து கட்டாயமாக இருக்கும் எனவும் விளக்கதளிக்கப்பட்டுள்ளது.

EDE ஸ்கேனர்களானது வைரஸ் தொற்றுகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் முக ஸ்கேனிங் தொழில்நுட்பம் ஆகும். இது கடந்த ஆண்டு முதல் அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபி வரும் நபர்களைக் கண்காணிக்க அபுதாபியின் எல்லைப் பகுதிகளில் முதலில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறியான அதிக உடல் வெப்பநிலையைக் கண்டறிய தெர்மல் ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இது குறித்து தெரிவிக்கையில் “கொரோனா தொற்றுநோய்க்கான அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவின் அறிவுறுத்தல்களின்படி, வணிக மற்றும் சுற்றுலா மையங்களில் மற்றும் நிகழ்வுகளில் EDE மற்றும் தெர்மல் ஸ்கேனிங் பயன்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, கிரீன் பாஸ் பயன்படுத்தப்படும்” என்று அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை நிறுவனங்களுக்கு வழங்கிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல வணிக வளாகங்கள் EDE மற்றும் தெர்மல் ஸ்கேனர்களை இனி பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் கிரீன் பாஸ் தேவையும் தளர்த்தப்படும் என்று மால் மேலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், உள்ளூர் அதிகாரிகள் கொரோனா நெறிமுறைகளை எளிதாக்கி புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இதில் கிரீன் பாஸின் செல்லுபடியை 30 நாட்களாக அதிகரிப்பது, பெரும்பாலான பொது இடங்களில் முக கவசங்கள் அணிவதை அவர்களின் விருப்பமாக மாற்றுவது மற்றும் கொரோனாவிற்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஐந்து நாட்களாகக் குறைத்தது போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!