அமீரக செய்திகள்

துபாயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்து கோயில்..!! கோயிலுக்கு செல்ல முன்பதிவு கட்டாயம்..!!

சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை பேணும் துபாயில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு, புதிய இந்து கோவிலின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நடைபெற்றுள்ளது. துபாயின் ‘வழிபாட்டு கிராமம்’ என்று குறிப்பிடப்படும் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், அக்டோபர் 4, செவ்வாய் அன்று அமீரகம் முழுவதும் உள்ள வழிபாட்டாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

துபாயின் ஜபெல் அலியில் உள்ள ‘வழிபாட்டு கிராமம்’ இப்போது ஏழு தேவாலயங்கள், குருநானக் தர்பார் சீக்கிய குருத்வாரா மற்றும் இந்த புதிய இந்து வழிபாட்டு இல்லம் உட்பட ஒன்பது மத ஆலயங்களைக் கொண்டுள்ளது.  சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் கோவிலின் கீழ் தளத்தில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றி கோவிலை திறந்து வைத்தார்.

ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் ஆகியோரும் அவர்களுடன் 200 க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள், தூதரகங்களின் தலைவர்கள், பல மதத் தலைவர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் இந்திய சமூக உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் கூறியதாவது: “துபாயில் இன்று புதிய இந்து கோவில் திறப்பு விழா நடைபெறுவது இந்திய சமூகத்திற்கு வரவேற்கத்தக்க செய்தியாகும். இந்த கோவில் திறப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பெரியளவிலான இந்து சமூகத்தினரின் மத அபிலாஷைகளுக்கு உதவுகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “துபாயில் புதிய இந்து கோவிலை ஷேக் நஹ்யான் திறந்து வைத்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கோவிலுக்கு நிலம் வழங்கியதற்கும், அதன் கட்டுமானத்தை எளிதாக்குவதற்கும் துபாய் அரசாங்கத்தின் கருணை மற்றும் தாராள மனப்பான்மைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் தாக்கிய காலமான கடந்த 2020 ஆம் ஆண்டில், 70,000 சதுர அடியில் இந்த வழிபாட்டு இல்லத்தைக் கட்டுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழிபாட்டு இல்லத்திற்குச் செல்ல முன் பதிவு தேவை என கூறப்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு செல்வதற்கு முன் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் இதற்காக அவர்கள் கோயில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தில் 200,000 பேர் QR குறியீடு அப்பாய்மெண்ட் முறையைப் பயன்படுத்தி கோயிலுக்குச் சென்றுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள், திருமணங்கள், பெயர் சூட்டு விழாக்கள் மற்றும் ‘ஜனேயு’ அல்லது புனித நூல் விழாக்கள் உட்பட இந்து சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறக்கூடிய ஒரு விசாலமான சமூக மையமாக இந்த கோவில் இருக்கும் என்றும் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!