அமீரக செய்திகள்

UAE: பிக் டிக்கெட்டில் 20 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்..!!

அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட்டின் ரேஃபிள் டிரா சீரிஸ் 244 இல் துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பெரும் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார். இந்த டிராவில் கேரளாவைச் சேர்ந்த பிரதீப் KP எனும் நபர் இந்த பெரும் பரிசுத்தொகையை வென்றிருக்கிறார்.

துபாயின் ஜபெல் அலியில் உள்ள கார் நிறுவனத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வரும் 24 வயதான அவர் கடந்த ஒரு வருடமாக பிக் டிக்கெட்டுகளை வாங்கி வருவதாகவும் கடைசியாக 064141 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கிய அவருக்கு பிக் டிக்கெட் டிராவின் போது முதல் பரிசு கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரதீப் மற்றும் அவருடன் பணிபுரியும் நபர்கள் என மொத்தம் 20 நபர்கள் சேர்ந்து செப்டம்பர் 13 ஆம் தேதி ஆன்லைனில் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அந்த பரிசுத் தொகையைப் பிரித்துக் கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாதங்களாக துபாயில் வசித்து வரும் பிரதீப், ஜாக்பாட் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பெரிய பரிசை வெல்வதாக எதிர்பார்க்காததால், இந்த பணத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் என எந்தத் திட்டத்தையும் யோசிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், துபாயைச் சேர்ந்த அப்துல் காதர் டேனிஷ் என்பவர், செப்டம்பர் 30 அன்று 252203 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கி 1 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையுடன் இரண்டாம் பரிசை வென்றுள்ளார். இதனையடுத்து 25 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்டிற்கான அடுத்த ரேஃபிள் டிரா நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக வாரந்தோறும் 1 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!