அமீரக செய்திகள்

அமீரகத்தில் நடைமுறைக்கு வந்த புதிய விசா மாற்றங்கள்.. உறுதிப்படுத்திய டைப்பிங் சென்டர் ஏஜெண்ட்ஸ்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா நடைமுறைகளில் நிறைய மாற்றங்கள் புகுத்தப்பட்டு இன்று அக்டோபர் 3-ம் தேதி முதல் புதிய விசா மற்றும் நுழைவு சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும் என ஏற்கெனவே அமீரக அரசு அறிவித்திருந்தது. இந்த புதிய விசா சீர்திருத்தங்கள் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளதை டைப்பிங் சென்டர் ஏஜெண்ட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது பற்றி அல் மாஸ் பிசினஸ்மென் சர்வீஸின் பொது மேலாளர் அப்துல் கஃபூர் கூறுகையில், “புதிய கிரீன் விசாக்கள் மற்றும் துபாயில் உள்ள மல்டி என்ட்ரி விசாக்களுக்கான கோரிக்கைகளை நாங்கள் பெற்று அதனை இப்போது சமர்ப்பிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

அட்வான்ஸ்டு விசா சிஸ்டம் என அழைக்கப்படும் இந்த புதிய விசா நடைமுறைகளானது கடந்த மாதம் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) அறிவிப்பின்படி, இன்று, அக்டோபர் 3 முதல் இந்த பெரிய மாற்றங்கள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மேம்பட்ட விசா அமைப்பு பல ரெசிடென்ஸ் வகைகளைக் கொண்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று முதலீட்டாளர்களுக்கான கிரீன் விசா ஆகும், இது ஒரு தனிநபர் தனது குடும்பத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்ய அனுமதிக்கிறது. மேலும் இது தற்போதுள்ள இரண்டு வருட விசா முறைக்கு மாறாக 5 வருடங்களுக்கு விசாவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திறமையான தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்கள் உட்பட பல்வேறு நபர்களுக்கு இது பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் கஃபூர் மேலும் கூறுகையில், “அதில் குறிப்பாக கிரீன் விசாவிற்கு நாங்கள் பல விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். எங்கள் சில வாடிக்கையாளர்களுக்கு இன்று அல்லது நாளை முதல் விண்ணப்பிக்கத் தொடங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமீரகத்தில் கோல்டன் விசாவுக்கான தேவைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கிய முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், திறமையான நபர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள், சிறந்த மாணவர்கள் ஆகியோரால் இந்த கோல்டன் விசா பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த புதிய விதிகள், பெற்றோர்கள் தங்கள் மகன்களுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், மகன்களுக்கு 18 வயது வரை மட்டுமே ஸ்பான்சர் செய்ய முடியும். அதே நேரத்தில் திருமணமாகாத மகள்கள் காலவரையற்ற நாட்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்யலாம் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்கு சிறப்பு அனுமதி பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறியவை மட்டுமல்லாது விசிட் விசா அனுமதிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி டூரிஸ்ட் விசாக்கள் முன்பு 30 நாட்களுக்கு தங்க அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது இந்த விசா வைத்திருப்பவர்கள் 60 நாட்கள் தங்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஐந்து வருட மல்டி என்ட்ரி சுற்றுலா விசாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான்சர் தேவையில்லை என்றும் குறைந்தபட்சம், 4,000 டாலர் வங்கி இருப்பு வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து 90 நாட்கள் தங்க முடியும் என அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!