அமீரக செய்திகள்

UAE: பிளாஸ்டிக் பை வாங்கும் நபர்களுக்கு இனி கட்டணம்..!! ஷார்ஜாவில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை..!!

ஷார்ஜாவில் வரவிருக்கும் ஜனவரி 1, 2024 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களைத் தடை செய்யவிருப்பதாக ஏற்கெனவே ஷார்ஜா அரசு அறிவித்திருந்தது. மேலும் ஷார்ஜா எமிரேட்டில் உள்ள விற்பனை நிலையங்கள் நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் இந்த வருட அக்டோபர் 1 முதல் 25 ஃபில்ஸ் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் இந்த புதிய பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.

ஷார்ஜா அரசு ஏற்கெனவே கூறியுள்ளதன்படி  ஜனவரி 1, 2024 முதல், ஷார்ஜாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை வர்த்தகம் செய்வது, உற்பத்தி செய்வது, வழங்குவது அல்லது இறக்குமதி செய்வது தடைசெய்யப்படும். அதற்கு பதிலாக ஷார்ஜா நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள தீர்மானத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் மற்றும் பல முறை பயன்படுத்தும் பைகள் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும்.

பிளாஸ்டிக் மாசுபாட்டின் அபாயங்களிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே இந்த தீர்மானத்தின் நோக்கமாகும் என அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பை முற்றிலும் தடைசெய்யப்படும் காலம் வரை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் எண்ணத்தை குடியிருப்பாளர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல முறை பயன்படுத்தும் பைகளின் நிலைத்தன்மையின் தரங்களை நிர்வகிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பைகள் நகராட்சி விவகாரங்கள் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விற்பனை நிலையங்கள் 25-ஃபில்ஸ் கட்டணத்தைப் பற்றி நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதன் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாற்று வழிகளைப் பயன்படுத்த வழிகாட்டவும் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்துவதின் கீழ் இந்தத் தீர்மானம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று அமீரகத்தின் மற்றொரு எமிரேட்டான அபுதாபியில், ஜூன் 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து துபாயில் ஜூலை 1-ஆம் தேதி முதல், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைக்கு 25 ஃபில்ஸ் வசூலிக்கின்றனர். இதன் காரணமாக, துபாயில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் ஒரு மாதத்திற்குள் இதுபோன்ற பைகளின் பயன்பாட்டில் 40 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டதாகத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!