அமீரக செய்திகள்

UAE: கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு.. விமான பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யும் நபர்களுக்கு செப்டம்பர் 28 முதல், அமீரகத்தில் சில கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 26 அன்று, அமீரகத்தில் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) கொரோனாவிற்கான மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அறிவித்தது. விமானத் துறைக்கான குறிப்பிட்ட நெறிமுறைகளுடன் அறிவிக்கப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 28 முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்வதற்கான வழிகாட்டுதல்களைப் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முக கவசம்

செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயமா அல்லது இல்லையா என்பதை விமான நிறுவனங்களே முடிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என்று NCEMA கூறியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் விமான நிறுவனங்கள், துபாய் வரும் பயணிகளுக்கு விமானத்தில் இனி முக கவசம் கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளன. இருப்பினும், இரு விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்தைப் பொறுத்து துபாயிலிருந்து பயணிக்கும்போதோ அல்லது துபாய் வழியாகப் பயணிக்கும்போதோ, பயணத்தின்போதும் சென்றடைய வேண்டிய இடத்தை அடையும் போதும் முக கவச விதிகள் பொருந்தும் என்பதை நினைவூட்டியுள்ளன.

அதேபோல் எதிஹாட் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் “விமானத்தில் முக கவசம் தொடர்பான எங்கள் விதிகளை நாங்கள் தளர்த்தியுள்ளோம். நீங்கள் சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சீஷெல்ஸ் அல்லது கனடா ஆகிய நாடுகளுக்குப் பயணிக்கும் பட்சத்தில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் ஏர் அரேபியா விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று ஏர் அரேபியா விமான நிறுவனமும் அறிவித்துள்ளது. அதே போல் துபாய் விமான நிலையங்களிலும் இனி முக கவசம் அணிய தேவையில்லை எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்வதற்கான விதிமுறைகள்

NCEMA ஆல் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அமீரகத்திற்கு வரும் தடுப்பூசி மற்றும் தடுப்பூசி போடப்படாத பயணிகளுக்கு பின்வரும் நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு PCR பரிசோதனை தேவையில்லை. பிப்ரவரி 26, 2022 முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை பிரதிபலிக்கும் சரியான தடுப்பூசி சான்றிதழை QR குறியீட்டுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் தடுப்பூசி போடாத பயணிகள் அமீரகம் வருவதற்கு 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட RT-PCR சோதனையின் எதிர்மறையான முடிவை வழங்கலாம் அல்லது அவர்கள் அமீரகம் வருவதற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் 30 நாட்களுக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததற்கான சான்றிதழை (QR குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும்.

PCR சோதனை மற்றும் தடுப்பூசி தேவை இல்லாதவர்கள்

>> 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

>> மிதமான மற்றும் கடுமையான இயலாமை கொண்ட பயணிகள்

– மிதமான அல்லது கடுமையான இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களில் நரம்பியல் கோளாறுகள் மற்றும் அறிவுசார் அல்லது வளர்ச்சி குறைபாடுகளை உள்ளடக்கிய பாதிப்புகள் அடங்கும். எடுத்துக்காட்டாக: கடுமையான முதுகுத் தண்டு காயம், அல்சைமர் நோய், அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS), அட்டாக்ஸியா, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம், பெல்ஸ் பால்ஸி, மூளைக் கட்டிகள், பெருமூளை அனீரிஸம், பெருமூளை வாதம், டவுன் சிண்ட்ரோம், கால்-கை வலிப்பு மற்றும் வலிப்புத்தாக்கங்கள் கொண்ட பயணிகள்.

– பார்வையற்றவர்கள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் உட்பட மற்ற அனைத்து பயணிகளும் தேவைகளுக்கு ஏற்ப எதிர்மறையான COVID-19 RT PCR சோதனைச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

ஐக்கிய அரபு அமீ்ரகத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள்

NCEMA இன் படி, தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கான விமானம் புறப்படுவதற்கு முந்தைய விதிமுறைகள் பயணிகள் செல்ல வேண்டிய இடங்களின் நெறிமுறைகளின்படி தீர்மானிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!