அமீரக செய்திகள்

அரபு நாடுகளில் முதன் முறையாக நிலவிற்கு இன்று அனுப்பப்படும் அமீரகத்தின் விண்கலம் “Rashid Rover”

மிகவும் குறைந்த ஆண்டுகளிலேயே நம்பமுடியாத அளவிற்கு அதிகளவு வளர்ச்சியை கண்ட நாடு என்றால் அது ஐக்கிய அரபு அமீரகம் தான். ஒரு சில தசாப்தங்களுக்கு முன்பாக அமீரகம் இந்தளவு வளர்ச்சியைப் பெறும் என கூறியிருந்தால் கூட யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். வறண்ட பாலைவனமாக இருந்த அமீரகத்தை அமீரக தலைவர்கள் தங்களது கடின உழைப்பாலும் சிறந்த திறனாலும் உலகையே வியந்து பார்க்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் கல்வி, போக்குவரத்து, விவசாயம், தொழில் என எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வரும் அமீரகம் சமீப ஆண்டுகளாக விண்வெளி துறையிலும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்ற முதல் அமீரக குடிமகனாக ஹஸ்ஸா அல் மன்சூரி பெயரெடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி விண்வெளி துறையில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட அமீரகத்தை உலகமே திரும்பிப் பார்த்தது.

தற்பொழுது அந்த வரிசையில் இதுவரை விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் மூன்று நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியுள்ள நிலையில் அதில் நான்காவது நாடாக தனது பெயரையும் இணைக்க முயற்சி எடுத்துள்ளது அமீரகம். மேலும் நிலவினை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் இந்த விண்கலத்திற்கு ரஷீத் ரோவர் (Rashid Rover) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

துபாயின் மறைந்த ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமின் நினைவாக இந்த ரோவருக்கு ரஷீத் என்று பெயரிடப்பட்டது. அவர் துபாய் க்ரீக்கிற்கு அருகிலுள்ள சிறிய பகுதியை இருந்து நவீன துறைமுக நகரம் மற்றும் வணிக மையமாக துபாயை மாற்றியமைக்க காரணமாக இருந்தார். துபாயில் உள்ள முகமது பின் ரஷித் விண்வெளி மையத்தில் (Mohamed Bin Rashid Space Center) இந்த ரோவர் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிலவிற்கு விண்கலத்தை அனுப்பும் முதல் அரபு நாடு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலவுக்கான வரலாற்றுப் பயணத்திற்கான ஏவுதல் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து தற்பொழுது அதன் பயணத்தை இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ஆரம்பிக்க தயாராகவுள்ளது. நிலவில் ரஷித் ரோவரை தரையிறக்கும் ஜப்பானை தளமாகக் கொண்ட ispace inc (ispace), HAKUTO-R மிஷன் 1 லூனார் லேண்டர் (HAKUTO-R Mission 1 lunar lander) ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் (SpaceX Falcon 9 rocket) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

முகமது பின் ரஷித் விண்வெளி மையம் (MBRSC) நவம்பர் 30 புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரக நேரப்படி மதியம் 12.39 மணிக்கு ஏவப்படும் என்று அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இதனை நேரலையில் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. நவம்பர் 30 புதன்கிழமை மதியம் 12:39 மணிக்கு அமெரிக்காவின் கேப் கனாவெரல் விண்வெளிப்  நிலையத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பிற்கான முதல் எமிராட்டி மிஷனான ராஷித் ரோவரின் ஏவுதலின் நேரடி ஒளிபரப்பை  https:// t.co/LbRXOJXcbv#EmiratesLunarMission #UAEtotheMoon என்ற லிங்கில் சென்று பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஃபுளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம் 40ல் இருந்து இந்த ரோவர் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது விண்ணிற்கு ஏவப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு 385,000 கிமீ பயணித்து ஏப்ரல் 2023 இல் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷித் ரோவரின் முதன்மை தரையிறங்கும் தளம் மேரே ஃப்ரிகோரிஸின் தென்கிழக்கு வெளிப்புற விளிம்பில் (southeastern outer edge of “Mare Frigoris”) உள்ள அட்லஸ் பள்ளம் (Atlas Crater)  ஆகும். ஒரு ‘Mare’ என்பது நிலவின் மேற்பரப்பில் ஒரு தட்டையான, இருண்ட சமவெளி. இந்த தளம் நிலவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது மற்றும் இதற்கு முன்பு இப்பகுதி ஆய்வு செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

துபாயின் முன்னாள் ஆட்சியாளரான மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமின் பெயரிடப்பட்ட 10 கிலோ எடையுள்ள ரஷித் ரோவர், சந்திரனின் பிளாஸ்மாவை ஆய்வு செய்து, நிலவில் இருக்கும் தூசி, நிலவின் மேற்பரப்பில் இயக்கம் மற்றும் வெவ்வேறு மேற்பரப்புகள் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது பற்றிய நீண்டகால கேள்விகளுக்கு பதில்களை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது மைக்ரோஸ்கோபிக் மற்றும் தெர்மல் இமேஜிங் என்ற இரண்டு உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்களைப் பயன்படுத்தி தரவு மற்றும் படங்களை பூமிக்கு அனுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரஷித் ரோவர், தரையிறங்கியவுடன், சந்திர மண்ணின் பண்புகள், நிலவின் பெட்ரோகிராஃபி (petrography) மற்றும் புவியியல், தூசி நகர்வு, மேற்பரப்பு பிளாஸ்மா நிலைமைகள் மற்றும் சந்திரனின் ஒளிமின்னழுத்த உறை (Moon’s photoelectron sheath) ஆகியவற்றை ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவில் “கட்டாய சோதனைகளை முடித்தவுடன், சந்திர மேற்பரப்பின் இயற்பியல் நிகழ்வைப் பற்றிய நமது புரிதலை வளப்படுத்த, தரவுகளைக் கண்டறியும் தொடர்ச்சியான சோதனைகளை இயக்க ரோவர் தயாராக உள்ளது. பூமியில் இரண்டு வாரங்களுக்குச் சமமான ஒரு சந்திர நாளுக்கு ரோவர் வேலை செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று, துபாய் ஊடக அலுவலகமானது ரோவரின் படிப்படியான செயல்பாட்டை விளக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!