அமீரக செய்திகள்

அமீரகத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை..!! குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை குறைந்து மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அமீரகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கனமழை பெய்துள்ள பகுதிகளில் தேசிய வானிலை மையம் (NCM) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வழங்கியுள்ளன.

நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள மசாஃபி பகுதியில் கனமழையும் ஆலங்கட்டி மழையும் பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வானிலை நிலவுகையில் வெளியே செல்லும்போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அளவிலான மழை மற்றும் காற்று, சில சமயங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக நிலவும் வானிலை காரணமாக, குடியிருப்பாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இத்தகைய வானிலை நிலவும் சமயங்களில், வாகனங்களை ஓட்டும் போது சாலைகளில் வேகத்தை குறைக்குமாறும் வாகன ஒட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் NCM நாட்டின் சில பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இத்தகைய வானிலை நிலவும் போது குடியிருப்பாளர்கள் கடற்கரை செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!