அமீரக செய்திகள்

துபாய் மன்னர் அறிவித்துள்ள ‘வேற லெவல்’ திட்டம்..!! சுற்றுலா துறையில் மீண்டும் ஒரு மைல் கல்லை எட்டவிருக்கும் துபாய்..!!

உலகளவில் மக்கள் சுற்றுலா செல்வது என்றாலே தற்பொழுது தவிர்க்க முடியாத ஒரு இடமாக துபாய் வளர்ந்துள்ளது. சுற்றுலாவாசிகளுக்காக பல்வேறு இடங்களும் நிகழ்வுகளும் துபாயில் இருக்கின்றன. உலகளவில் அதிகளவு சுற்றுலாவாசிகள் வரக்கூடிய இடங்களில் ஒன்றாகவும் துபாய் உள்ளது. ஏற்கெனவே பல்வேறு இடங்கள் சுற்றிப்பார்க்க துபாயில் இருக்கும் நிலையில் தற்பொழுது புதிதாக ஒன்றும் அதில் இணையவிருக்கின்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, துபாயின் பாலைவனத்தில் 100 கிமீ தூரத்திற்கு ஒரு அழகிய பாதை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Saih Al Salam Scenic Route அல்லது “பாதை 1-(Route 1)” என அறியப்படும் இதில் வாகனங்களுக்கான பிரத்யேக சாலைகள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்க பாலைவன சைக்கிள்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களுக்கான சிறப்பு பாதைகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தில் ஹாட் ஏர் பலூன் சவாரி, ஹெலிகாப்டர் மற்றும் ஏர் டாக்ஸி பயணங்கள் இருக்கும் என்றும், இது அல் குத்ராவில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட லேக் மற்றும் லவ் லேக் அருகில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துபாய் ஆட்சியாளர் எமிரேட்டின் கிராமப்புறங்களை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததையொட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 2,216 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், இந்தத் திட்டம் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேரடிப் பொருளாதார வருவாயைக் கொண்டுவரும் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “இன்று, துபாய் உலகின் மிக அழகான நகரம். நாங்கள் இப்போது துபாயின் கிராமப்புறங்களை மிக அழகான மற்றும் மகிழ்ச்சியான இடங்களாக மாற்ற முயற்சிக்கிறோம்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ரூட் 1 முழுமையான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்கான வசதிகளை உள்ளடக்கும் என்றும் பனோரமிக் காட்சிகளை வழங்கும் கண்ணாடி மாடங்களுடன் (domes) கூடிய முகாம்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் அமைக்கப்படும் ஓய்வறைகள் பார்வையாளர்கள் ஏரிகளுக்கு அருகில் அமைதியான நேரத்தைக் கழிக்க அனுமதிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இடமானது நிகழ்வுகள், கலைக் கண்காட்சிகள் தவிர்த்து, திறந்தவெளி சினிமாவையும் கேரவன் பார்க்கையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏரிகளை சுற்றி கயாக் (kayak) செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு பார்வையாளர்கள் குதிரை மற்றும் ஒட்டக சவாரியை அனுபவிக்க முடியும் அத்துடன் பாலைவனத்தில் நீண்ட நடைப்பயணத்திற்கு செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு பொழுதுபோக்கு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த திட்டமானது லெஹ்பாப், மார்கம், அல் மர்மூம், அல் லிசைலி, அல் ஃபகா மற்றும் அல் அவீர் உள்ளிட்ட இடங்களின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க முயல்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை வழங்குவதையும், ஒவ்வொரு பகுதியையும் ஒரு தனித்துவமான இடமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துபாய் நகர்ப்புறத் திட்டம் 2040க்கு இணங்க, அடுத்த 20 ஆண்டுகளுக்கு விரிவான வழிகாட்டியாக இந்த மாஸ்டர் திட்டம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!