அமீரக செய்திகள்

தேசிய தின கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய 8 முக்கிய விதிகளை அறிவித்த துபாய் காவல்துறை..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 51வது தேசிய தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிகாரிகள் தேசிய தின கொண்டாட்டங்களின் போது குடியிருப்பாளர்கள் பொது பாதுகாப்பை உறுதிப்படுத்த விதிகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பல விதிகள் குறித்த உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு ஒரு ஆலோசனையை மற்றும் ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய பல குறிப்புகளை பட்டியலிட்டுள்ளது.

இது பற்றிய ஒரு ட்வீட்டில், போக்குவரத்து ஒழுங்கு மற்றும் வாகன விதிமுறைகள் தொடர்பான எட்டு வழிகாட்டுதல்களை காவல்துறை பட்டியலிட்டுள்ளது. அதில் குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களை அலங்கரிக்கலாம், ஆனால் அது தங்களுக்கு அல்லது பிற சாலைப் பயனாளர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல முக்கிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தினத்தை பாதுகாப்பாக கொண்டாட துபாய் காவல்துறை அறிவித்துள்ள 8 விதிமுறைகள்

>> அலங்காரங்கள் வாகனத்தின் நிறங்களை மாற்றக்கூடாது. மேலும் வாகனங்கள் நியமிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றக்கூடாது.

>> வாகனங்களில் புண்படுத்தும் சொற்றொடர்களை எழுதுவது அல்லது பொருத்தமற்ற ஸ்டிக்கர்களை வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

>> வாகனத்தின் முன் மற்றும் பின்னால் இருக்கும் நம்பர் பிளேட் மறைக்கப்பட கூடாது.

>> வாகன ஓட்டிகள், பயணிகள் அல்லது பாதசாரிகள் என அனைவரும் அனைத்து வகையான ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

>> கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது மற்றும் ஸ்டண்ட் செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

>> தேசிய தின கொண்டாட்டத்தின் போது பேரணிகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன, வாகன ஓட்டிகள் போக்குவரத்திற்கு இடையூறாகவோ அல்லது பிறரின் வழியைத் தடுக்கவோ கூடாது.

>> வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல் (side window), முன் அல்லது பின் கண்ணாடிகளை ஸ்டிக்கர்கள் அல்லது முன் சன்ஷேட் (front sunshade) மூலம் மூடுவது சட்டவிரோதமானது.

>> பயணிகள் வாகனத்தில் பாதுகாப்பாக அமர வேண்டும், மேலும் பிக்-அப் டிரக்கின் டிரங்கில் அல்லது காரின் மேல் அமர்ந்து செல்லக்கூடாது. 

அபராதம்

துபாய் காவல்துறையின் கூற்றுப்படி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 23 போக்குவரத்து புள்ளிகள் (black points) விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 நாட்களுக்கு வாகனங்களை பறிமுதல் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இரைச்சலுடன் வாகனத்தை ஓட்டினால், 2,000 திர்ஹம் மற்றும் 12 பிளாக் பாயிண்ட்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி வாகனத்தில் விண்டோ டின்ட்டிங் (window tinting) செய்தால் 1,500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வாகன ஓட்டிகளும் எக்காரணம் கொண்டும் சாலையின் நடுவில் நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்காக 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு ப்ளாக் பாய்ண்ட்ஸ் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!