அமீரக செய்திகள்

UAE: “அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது”.. தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அமீரக அதிபர் அஞ்சலி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தியாகிகள் நினைவு தினமானது நாளை (நவம்பர் 30) அனுசரிக்கப்படும் நிலையில் அமீரக தலைவரான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், நவம்பர் 30 ஆம் தேதியை ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான மக்களின் விசுவாசத்தை வலுப்படுத்தும் ஒரு நாள் என்றும், அதே நேரத்தில் தங்கள் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 அன்று அனுசரிக்கப்படும் தியாகிகள் நினைவு தினத்தைக் குறிக்கும் ஒரு அறிக்கையில், தங்கள் உயிரைக் கொடுத்தவர்களை ஐக்கிய அரபு அமீரகம் போற்றும் மற்றும் அவர்களுக்கு மரியாதையளிக்கும் என்று கூறியதுடன் அவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் “இந்த நாளில், நமது மண்ணின் இறையாண்மையைப் பாதுகாத்து, நமது கொடியை உயரப் பறக்க விடுவதற்காக உயிர்நீத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தியாகிகளுக்காக நாங்கள் போற்றுதலுடனும் மரியாதையுடனும் இருக்கிறோம். அவர்களின் தியாகங்கள் வருங்கால சந்ததியினரின் நினைவுகளில் பொறிக்கப்படும் என்று நாங்கள் சபதம் செய்கிறோம். மேலும் ஐக்கிய அரபு அமீரக தலைமை எங்கள் தியாகிகளின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்ற எங்கள் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “நமது தேசத்தைக் காக்கும் போது தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவு கூறும் நாளாக நவம்பர் 30 ஆம் தேதியை நியமித்த மறைந்த சகோதரர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் முயற்சிகளை நாங்கள் மரியாதையுடனும் பாராட்டுடனும் நினைவுகூருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் ”நினைவு தினம் என்பது பாராட்டு மற்றும் விசுவாசத்தின் நேரமாகும். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்பாகும். நாம் கனவு காணும், திட்டமிடும், உழைக்கும் எதிர்கால ஐக்கிய அரபு அமீரகத்தை நேர்மையான கடின உழைப்பு மற்றும் பெரும் தியாகங்களால் மட்டுமே உருவாக்க முடியும். நமது தேசத்தினைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் நமது வீரம் மிக்க ஆயுதப் படைகளின் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மற்றும் நமது பாதுகாப்புச் சேவைகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். அதே போல நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மனிதாபிமானப் பணியின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் எங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம்”.

கடவுள் ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதுகாத்து, நமது தியாகிகளின் ஆன்மாக்களுக்கு அவருடைய கருணையையும் மன்னிப்பையும் அளித்து, நமது தேசத்தின் பாதுகாப்பையும் நிலைநிறுத்தட்டும்” என அமீரக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!