அமீரக செய்திகள்

UAE: மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்று விட்டு 11வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்தியர்..!! ஷார்ஜாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

அமீரகத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து தானும் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஷார்ஜாவில் அமைந்துள்ள அல் ஃபுஹைரா அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தின் 11-வது மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்பு இந்தியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் (4 வயது மகன் மற்றும் 8 வயது சிறுமி) கொலை செய்து விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ஷார்ஜா காவல்துறையினர் விரைந்திருக்கின்றனர். அப்போது அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கொலை மற்றும் தற்கொலைக்கு பின்னணியில் உள்ள காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்திற்கான காரணத்தை அறிய தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் காவல்துறைக்கு சரியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணியளவில் அழைப்பு வந்ததை அடுத்து காவல்துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலில் இருந்து ஒரு கடிதத்தையும் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அதில் தனது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்றதாகக் கூறி, அவர்களின் உடல்களை மாடியிலிருந்து மாற்றுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாக எழுதப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து இறந்தவர்களின் சடலங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்பந்தமாக அந்த குடியிருப்பில் வசிக்கும் அக்கம் பக்கத்தினர் கூற்றுப்படி, இந்த இந்திய குடும்பம் கடந்த ஆறு மாதங்களாகவே இந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், இச்சம்பவத்திற்கான காரணம் மற்றும் முழு விவரங்களை அறிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!