அமீரக செய்திகள்

UAE ரமலான்: அதிகளவு சாலை விபத்துகள் ஏற்படும் நேரங்கள் அறிவிப்பு…!! பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட நிபுணர்கள்..!!

அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சாலையில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும், போக்குவரத்து விதிகளில் அதிக கவனத்துடன் இருக்கவும் சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுவாக ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் நோன்பு இருப்பதால், நீரிழப்பு, குறைந்த இரத்த சர்க்கரை மற்றும் சோர்வு காரணமாக வாகன ஓட்டிகளின் கவனம், பார்வை மற்றும் எதிர்வினை ஆகியவை பாதிக்கக் கூடும். எனவே, இந்த சமயங்களில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகரிக்கும் என்று RoadSafetyUAE இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் எடெல்மேன் என்பவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அடிக்கடி அசாதாரணமான மற்றும் ஒழுங்கற்ற உணவு நேரங்கள் மற்றும் தூக்க முறைகள் போன்றவை சோர்வு, பொறுமையின்மை மற்றும் கவனச்சிதறல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்றும் இது அதிகாலை விபத்துகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிகமாக விபத்துகள் நடக்கும் நேரம்:

6,000-க்கும் மேற்பட்ட வாகனக் காப்பீட்டுக் கோரிக்கை தரவுகளின் அடிப்படையில், அமீரகத்தின் ரமலான் விபத்துக் கணக்கெடுப்பின்படி, வயதான வாகன ஓட்டிகள் மற்றும் குறிப்பாக ஆண் ஓட்டுநர்கள் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இஃப்தாருக்கு முந்தைய (மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை) மற்றும் காலை 8 மணி முதல் 10 மணி வரை அதிகளவு விபத்து ஏற்படும் நேரங்கள் என்று கூறப்படுகின்றன. அதிலும் செவ்வாய் கிழமைகள் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தான நாட்கள் என்றும், ஒப்பீட்டளவில் ஞாயிற்றுக்கிழமைகள் பாதுகாப்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, இஃப்தார் நேரம் நெருங்குகையில் வாகன ஓட்டிகள் விரைந்து செல்வதால், அந்த நேரம் சிக்கலான நேரமாகும். மேலும் வாகன ஓட்டிகள் சாலைகளில் தவறாக நடந்துகொள்ள இதை ஒரு காரணமாக சொல்லிக்கொள்கின்றனர். ஆகையால், சாலைப் பயனாளர்கள் அனைவரும் இந்த நேரத்திலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று தாமஸ் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் போன்றவற்றை தவறாமல் அணிந்து கொண்டு செல்லவும், முந்தைய வாகனங்களுக்கு இடையே போதுமான தூரம், போக்குவரத்து சிக்னல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இஃப்தார் நெருங்கும் நேரங்களில் சாலைகளில் செல்வதை தவிர்க்கவும், நோன்பு இருக்கும் மற்றவர்களிடம் கருணையோடும் தாராள மனப்பான்மையோடும் இருக்கவும் வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!