UAE: விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிய 2 சுகாதார மையங்கள் தற்காலிகமாக மூடல்!! நோயாளிகளின் பாதுகாப்புக் கருதி நடவடிக்கை…

அபுதாபியில் உள்ள இரண்டு சுகாதார மையங்கள் பல்வேறு விதிமீறல்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாக அபுதாபி சுகாதார துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. அபுதாபி சுகாதாரத் துறை (DoH) இந்த இரண்டு மையங்களும் முறையாக பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொற்று கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றாததால், மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், அங்கு காலாவதியான பொருட்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் இரத்த அலகுகளை சேமிப்பதற்கான தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, நோயாளிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காகவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரண்டு சுகாதார மையங்கள் மீதும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக DoH கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, சரிசெய்யப்பட்ட நடைமுறைகளை உறுதி செய்வதற்காக மையங்களை பார்வையிட ஆய்வாளர்கள் மீண்டும் வருவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அபுதாபியில் இயங்கும் அனைத்து சுகாதார மையங்களையும் அதன் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குமாறும், சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சுகாதார சேவைகளை வழங்குமாறும் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.