அமீரக செய்திகள்

துபாய்: சாலிக் டேக் இல்லாமல் வாகனங்கள் டோலை கடக்கலாமா..?? அபராதம் விதிக்கப்படுவதற்கு சலுகை காலம் உள்ளதா..?? சுற்றுலாவாசி தனது வாகனம் ஓட்டும் போதும் சாலிக் டேக் பெற வேண்டுமா..?? அனைத்து விபரங்களும்..!!

துபாயில் உள்ள அனைத்து டோல் கேட்டுகளிலும் வாகனங்கள் கடந்து செல்லும் போது, அபராதங்களைத் தவிர்ப்பதற்கு சாலிக் டேக் (Salik tag) பெற்றிருக்க வேண்டும். இதில் அமீரகத்தில் அல்லாத வாகனங்கள் மற்றும் அமீரகத்தின் பிற எமிரேட்களில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் துபாயின் சாலிக் கேட்டினை கடந்து செல்லும் போது டேக் பெற்றிருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பெரும்பாலானோருக்கு பதில் தெரிந்தாலும் ஒரு சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருக்கலாம்.

அதாவது சாலிக் கேட்டினை கடந்து செல்லும் போது கண்டிப்பாக சாலிக் டேக் வாகனத்தில் இருக்க வேண்டுமா..?? தெரியாமல் சாலிக் டேக்கினை கடந்து சென்ற பின்னர் சாலிக் டேக் வாங்கினாலும் அபராதம் விதிக்கப்படுமா..?? அபராதம் விதிக்கப்படுவதற்கு சலுகை காலம் உள்ளதா போன்ற விபரங்களை கீழே காணலாம்.

பொதுவாக ஒரு வாகன ஓட்டி வேறு நாட்டிலிருந்து துபாய்க்கு வருகை தருகிறார் என்றால், அவர் சாலிக் டேக்குகளை வாங்க வேண்டும். அதேசமயம், சாலிக் அமைப்பில் பதிவு செய்யப்படாத வாகனமாக இருந்தாலும், சாலிக் கேட் வழியாக செல்லலாம். இருப்பினும் சாலிக் டேக்-க்கு பதிவு செய்வதற்கு முதல் பயணத்தின் தேதியிலிருந்து 10 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அந்த சலுகை காலத்திற்குள் நீங்கள் டேக்-ஐ வாங்கவில்லை என்றால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று துபாயின் அதிகாரப்பூர்வ சாலை கட்டண அமைப்பான சாலிக் கூறியுள்ளது.

எப்படி சாலிக் டேக்-ஐ வாங்குவது?

சவூதி, ஓமான் உள்ளிட்ட அமீரகத்திற்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர்கள் துபாயில் உள்ள எந்த பெட்ரோல் நிலையத்திலும் சாலிக் டேக்-ஐப் பெறலாம். இதில் Emarat, EPPCO, ENOC மற்றும் ADNOC ஆகியவை அடங்கும். அதேவேளை, https://www.salik.rta.ae/ என்ற லிங்க் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே சாலிக் இணையதளத்தில் இருந்து டேக் வாங்க முடியும்.

தேவையான விவரங்கள்:

 • மொபைல் எண் (அனைத்து சாலிக் தொடர்பான தகவல் தொடர்புக்கும் பயன்படுத்தப்படும்)
 • வாகன பதிவு அட்டை விவரங்கள் (நீங்கள் பெட்ரோல் நிலையங்களில் இருந்து டேக் வாங்குகிறீர்கள் என்றால் தேவையில்லை).

செலவு

 • சாலிக் டேக்குக்கு 50 திர்ஹம்.
 • ப்ரீபெய்ட் டோல் பேலன்ஸுக்கு 50 திர்ஹம், இந்த தொகை டேக் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் உங்கள் சாலிக் கணக்கில் சேர்க்கப்படும்.

மொத்தம் 100 திர்ஹம் செலவாகும்.

சாலிக் டேக்-ஐ ஆக்டிவேட் செய்தல்:

பெட்ரோல் நிலையத்தில் சாலிக் டேக்குக்கு பணம் செலுத்திய பிறகு, 800 SALIK (800 72545) என்ற எண்ணை அழைத்து, சாலிக் டேக் எண்ணை உள்ளிட்டு PIN ஐ அமைப்பதன் மூலம் டேக்-ஐ ஆக்டிவேட் செய்யலாம்.

சாலிக் உங்கள் கணக்கிலிருந்து எவ்வாறு பணத்தைக் கழிக்கிறது?

நீங்கள் டேக் வாங்கியதும், சாலிக் ஸ்டிக்கர் டேக்கை உங்கள் காரின் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். உங்கள் ப்ரீபெய்டு சாலிக் கணக்குடன் டேக் ஸ்டிக்கர் இணைக்கப்பட்டிருப்பதால், சாலிக் கட்டணங்களை ஈடுகட்ட போதுமான பணம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

எனவே, நீங்கள் ஒவ்வொரு முறையும் நீங்கள் சாலிக் டோல் கேட்டைக் கடக்கும்போது, ​​ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பம் உங்கள் வாகனத்தைக் கண்டறிந்து உங்கள் சாலிக் ஸ்டிக்கர் டேக்கை ஸ்கேன் செய்யப்படும். பின்னர், உங்கள் ப்ரீபெய்டு டோல் அக்கவுண்ட்டிலிருந்து 4 திர்ஹம் டோல் தானாகவே கழிக்கப்படும்.

துபாயில் உள்ள சாலிக் கேட்கள்:

 1. அல் சஃபா (ஷேக் சையத் சாலை)
 2. அல் பர்ஷா (ஷேக் சையத் சாலை)
 3. அல் கர்ஹூத் பிரிட்ஜ் (ஷேக் ரஷித் சாலை)
 4. அல் மக்தூம் பிரிட்ஜ் (உம்ம் ஹுரைர் சாலை)
 5. அல் மம்சார் நார்த் (அல் இத்திஹாத் சாலை)
 6. அல் மம்சார் சவுத் (அல் இத்திஹாத் சாலை)
 7. விமான நிலைய சுரங்கப்பாதை (பெய்ரூட் ஸ்ட்ரீட்)
 8. ஜெபல் அலி (ஷேக் சையத் சாலை)

அபராதம்:

உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பத்து நாள் அவகாசத்திற்குள் சாலிக் டேக்குக்கு பதிவு செய்யத் தவறினால், பின்வரும் அபராதங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்:

10 நாட்களுக்குப் பிறகு நீங்கள் முதல் முறையாக டோல் கேட்டைப் பயன்படுத்தும் போது 100 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது பயணத்தில் 200 திர்ஹம்

பின் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு டோல் கேட்டைக் கடக்கிறீர்கள் எனும்போது 400 திர்ஹம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!