விறுவிறுவென 21 தளங்களுக்கு பரவிய தீ..!! துபாய் குடியிருப்புக் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட மாபெரும் தீவிபத்து..!!

துபாயில் உள்ள குடியிருப்பு கோபுரத்தில் இன்று (திங்கட்கிழமை, செப்டம்பர் 25) அதிகாலை 4:15 மணியளவில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த குடியிருப்பாளருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் அமைந்துள்ள எலைட் 6 குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயானது, கிட்டத்தட்ட 2 மணிநேரம் கொழுந்துவிட்டு எரிந்ததாகவும், 21 தளங்களுக்கும் தீ பரவியதாகவும் கட்டிடத்தில் வசித்த குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சமபவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அல் பர்ஷா நிலையத்திலிருந்து ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அங்கிருந்த குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் துபாய் குடிமைப் பாதுகாப்பு (Dubai Civil Defence) தெரிவித்துள்ளது.
மேலும், மற்ற இரண்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்த அவசரகால பணியாளர்கள் கட்டிடத்தில் தீவிரமாகப் பரவியத் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவழியாக தீயணைப்பு வீரர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை 5.23 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தீப்பிடித்த கட்டிடத்தில் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதைத் தொடர்ந்து அந்த இடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தீயணைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள், குடியிருப்பு கோபுரத்தின் இடதுபுறத்தில் கடுமையாக தீ பரவுவதைக் காட்டுகின்றன.