அமீரக செய்திகள்

அமீரகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..!! வெப்பநிலையும் படிப்படியாக குறையும் என்று NCM முன்னறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஓரிரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், சில சமயங்களில் புத்துணர்ச்சியூட்டும் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும் கூறியுள்ளது.

NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, அபுதாபி மற்றும் துபாயில் லேசான மழையுடன் ஓரளவு மேகமூட்டமான வானிலையை குடியிருப்பாளர்கள் அனுபவிப்பார்கள் என்றும், அதேவளை, ராஸ் அல் கைமா, அல் அய்ன் மற்றும் புஜைராவில் மேக மூட்டத்துடன் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அமீரகத்தில் குளிர்காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பித்து வரும் நிலையில், இன்று நாட்டில் 38 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், குறிப்பாக, அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை 32ºC ஐ எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மேற்கு நோக்கி வெப்பநிலை படிப்படியாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள அதேவேளையில், அபுதாபியில் 26ºC ஆகவும், துபாயில் 27ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 16ºC ஆகவும் குறைவான வெப்பநிலை பதிவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரப்பதத்தை பொருத்தவரையில் அபுதாபியில் 25 முதல் 70 சதவீதம் வரையிலும், துபாயில் 30 முதல் 65 சதவீதம் வரையிலும் ஈரப்பதம் நிலவும் எனவும் அமீரகத்தின் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது. அத்துடன் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் கடல் சீற்றமானது லேசானது முதல் மிதமானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!