ADVERTISEMENT

துபாய்-ஷார்ஜா பயணிகளுக்கு நற்செய்தி!! பகுதியளவு திறக்கப்பட்ட அல் தாவூன் இன்டர்சேஞ்ச்.. நெரிசல் இனி குறையும்

Published: 5 Nov 2026, 11:44 AM |
Updated: 5 Nov 2026, 11:44 AM |
Posted By: Menaka

நெரிசலைக் குறைத்து, போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தை ஷார்ஜா எமிரேட் பகுதியளவு திறந்துள்ளதால், துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள் இனி தடையற்ற பயணத்தை எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT

நவம்பர் 4, புதன்கிழமை அன்று ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த முதல் கட்டத்தில், அல் தாவூன் இன்டர்சேஞ்ச் பகுதியளவு திறக்கப்படுவதுடன், பல பாலங்கள் மற்றும் ஜங்ஷன்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்தத் திறப்பு விழா, ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியுடன் ஒருங்கே நடைபெறுகிறது. இதன் மூலம் ஷேக் முகமது பின் சையத் சாலையிலிருந்து எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவை நோக்கிய ஒருவழிப் பாதை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து முபதாரா முன்முயற்சிகள் அமலாக்க ஆணையத்தின் (Mubadara) தலைவர் டாக்டர் சலா பின் புட்டி அல் முஹைரி அவர்கள் பேசுகையில், மீதமுள்ள பகுதிகளில் கட்டுமானப் பணிகள் தொடரும் வேளையில், இந்தப் பகுதியளவு திறப்பு விழா, பார்வையாளர்கள் புத்தகக் கண்காட்சியை எளிதாகச் சென்றடைய உதவும் என்று கூறியுள்ளார்.

இரண்டாம் கட்டத்தில் என்னென்ன அடங்கும்?

இரண்டாம் கட்டத்தில், அல் தாவூன் ரவுண்டானாவில் உள்ள மேல்மட்ட ஜங்ஷன் மற்றும் அல் தாவூன் சுரங்கப்பாதை ஆகியவை முழுமையாகத் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், மூன்று தொழிற்துறை வீதிகளில் பாலங்கள் மற்றும் இன்டர்சேஞ்ச் முடிக்கப்படும், அல் குலஃபா அல் ரஷீதீன் இன்டர்சேஞ்ச் மேம்பாடுகள் செய்யப்படும், மற்றும் அதனை ஜமால் அப்துல் நாசர் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் ஒரு புதிய பாலமும் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தத் திட்டம் சாலைத் திறனை அதிகரிக்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், மற்றும் ஷார்ஜாவில் உள்ள குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறைப் பகுதிகளை துபாய்க்குச் செல்லும் முக்கிய சாலைகளுடன் இணைக்கும் கூடுதல் வழித்தடங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைத் திட்டத்தின் ஐந்து முக்கியப் பிரிவுகள்

இந்தத் திட்டம் புதிய சுரங்கப்பாதைகள், பாலங்கள், இன்டர்செக்ஷன்கள் மற்றும் சாலை விரிவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது:

  • அல் தாவூன் சுரங்கப்பாதை மற்றும் ரவுண்டானா: துபாயை நோக்கி ஒவ்வொரு திசையிலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட 560 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை. இது உச்ச நேரங்களில் மணிக்கு சுமார் 4,200 வாகனங்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அல் குலஃபா அல் ரஷீதீன் இண்டர்செக்ஷன் : இந்தச் இண்டர்செக்ஷனை ஜமால் அப்துல் நாசர் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் 315 மீட்டர் நீளமுள்ள பாலத்துடன், இரண்டு கீழ்ப்பாலங்கள் ஒவ்வொரு திசையிலும் கூடுதலாக இரண்டு வழித்தடங்களை வழங்கும். இந்த மேம்பாடுகள், மணிக்குச் சுமார் 2,600 வாகனங்கள் செல்லும் திறனை அதிகரிக்கும்.
  • முதல் மற்றும் இரண்டாம் தொழிற்துறைச் சாலைகள்: இண்டர்செக்ஷன் மேம்பாடுகள் மற்றும் இரண்டு புதிய பாலங்கள் துபாயில் உள்ள டமாஸ்கஸ் ஸ்ட்ரீட்டை ஷார்ஜாவில் உள்ள வாசித் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும். இந்தப் பகுதி மணிக்கு சுமார் 2,800 வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாம் தொழிற்துறைச் சாலை: புதிய பாலங்கள் மற்றும் ஒரு சுரங்கப்பாதை, ரிங் ரோடு, அல் கான் ஸ்ட்ரீட் மற்றும் தொழிற்துறைப் பகுதிகளை இணைத்து, ஷார்ஜா நகர மையத்தை நோக்கி ஒரு நேரடிப் பாதையை உருவாக்கும். இந்த இணைப்பு மணிக்கு சுமார் 5,200 வாகனங்கள் செல்லும் திறனை அதிகரிக்கும்.
  • ரிங் ரோடு அகலப்படுத்துதல்: இந்தச் சாலையில் ஷார்ஜா நகர மையத்தை நோக்கி இரண்டு கூடுதல் வழித்தடங்களும், ஷேக் முகமது பின் சையத் சாலையை நோக்கி ஒரு வழித்தடமும் அமைக்கப்படும். மேலும், மூன்று வழித் திருப்பப் பாதை ஒன்று இந்த நெடுஞ்சாலையை ரிங் ரோட்டுடன் இணைக்கும்.

ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டம் சுமார் 9.18 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை உள்ளடக்கியது, இதன் மொத்த தார் போடப்பட்ட பரப்பளவு 207,265 சதுர மீட்டர் ஆகும்.

வணிக நிறுவனங்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு எளிதான அணுகலை வழங்கும் வகையில், சேவைச் சாலைகள், பார்க்கிங் இடங்கள், நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகளில் செய்யப்படும் மேம்பாடுகளும் இந்தப் பணிகளில் அடங்கும்.

இது குறித்து ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (SRTA) தலைவர் யூசெஃப் கமிஸ் அல் ஒத்மானி கூறுகையில், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப எமிரேட் தனது சாலை வலையமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டங்கள், இணைப்புத்திறனையும் சாலை வலையமைப்பின் செயல்திறனையும் மேம்படுத்துவதோடு, குடியிருப்பாளர்கள், குடும்பங்கள் மற்றும் அவர்களின் அன்றாடப் பயணங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel