ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பிற்பகலில் இருந்து மீண்டும் தீவிரத்துடன் பெய்த கனமழையானது, அமீரகத்தின் ஏழு எமிரேட்களையும் புரட்டிப் போட்டுள்ளது. அமீரகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என கடந்த வாரம் வானிலை மையம் அறிவித்தபோது, பெரும்பாலான குடியிருப்பாளர்கள் அதனை பெரிதாக நினைக்கவில்லை.
ஆனால், நேற்றிரவு தொடங்கி தற்போது வரை நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரும் அன்றாட வேலைகளை செய்ய முடியாமலும், தங்களின் இருப்பிடங்களை சுற்றி சூழ்ந்துள்ள மழைநீரால் செய்வதறியாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், துபாயில் இன்று மாலை வெளுத்து வாங்கிய கனமழையால் துபாயின் பெரும்பாலான பகுதிகள் ஸ்தம்பித்துள்ளது. மழைநீர் சூழ்ந்ததன் காரணமாக சாலைகளிலும் தெருக்களிலும் காணும் இடமெல்லாம் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதுதவிர குடியிருப்பு கட்டிடங்களின் தரைதளத்திலும் மழைநீர் புகுந்ததால் துபாய் குடியிருப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர்.
துபாயில் உள்ள ஹோர் அல் அன்ஸ் (Hor Al Anz) பகுதியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேரந்த குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், நிலையற்ற வானிலை காரணமாக இன்று அவர் வீட்டிலிருந்து வேலை செய்ததாகவும், மாலையில் பெய்த கனமழையால் எதிர்பாராத விதமாக அவர் தங்கியிருக்கும் அறைக்குள் மழைநீர் புகுந்து விட்டதாகவும் கூறினார்.
மழைநீர் புகுந்ததினால் தங்களின் அறைக்குள் வைக்கப்பட்டிருந்து பெட்டி, சூட்கேஸ் என அனைத்து பொருட்களும் ஈரமாகி விட்டதாகவும், மழைநீர் இன்னும் வடியாததால் இன்றிரவு உறங்க வழியில்லாமல் திண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், எதிர்பாராத இந்த கனமழை காரணமாக இன்றிரவு ஹோட்டலில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், இது தனக்கு தேவையில்லாத ஒரு செலவு எனவும் அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
இதேபோன்று, துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், அவரது நண்பர் இன்று இந்தியாவிற்கு பயணம் செய்யவிருந்த நிலையில், திடீரென பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட 2.5 மணி தேரங்களுக்கும் மேல் டிராஃபிக்கில் அவர் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு ஷார்ஜாவிலிருந்து 10 மணிக்கு விமானம் என்பதால், இன்று தனது நண்பரால் இந்தியாவிற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் ஆகிய அனைத்து எமிரேட்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களும், இதேபோன்ற சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் அன்றாட தேவைகளுக்குக் கூட எங்கும் நகர முடியாமல் தங்களின் இருப்பிடங்களுக்குள்ளேயே அனைவரும் முடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், நாட்டில் நிலவும் இந்த நிலையற்ற மோசமான வானிலை நாளையும் தொடரும் என்பதால், துபாய் உட்பட அமீரகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு தேசிய வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. இதனால் துபாய் உட்பட அனைத்து அமீரக குடியிருப்பாளர்களும் பெரும் கலக்கத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அபுதாபியை புரட்டிப் போட்ட கனமழை.. அமீரகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..!!
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.