அமீரகத்தில் ஜூன் 15 முதல் தொடங்கும் தொழிலாளர்களுக்கான மதிய வேலை தடை..!! மீறும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்..
வளைகுடா நாடுகளை பொறுத்தவரை கோடைகாலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக மதிய வேளைகளில் நேரடியாக சூரிய ஒளி படுமாறு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய நேர இடைவேளை கொடுப்பது வழமையாக நடக்கும் நிகழ்வாகும். இந்த ஆண்டிற்கான கோடைகாலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு வெயிலின் தாக்கம் தற்பொழுது அதிகமாகவே இருக்கின்றது. எனவே, இந்த வருடத்திற்கான கோடைகாலத்தை முன்னிட்டு தொடர்ந்து 20-வது வருடமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூன் 15 முதல் மதிய வேலைக்கான தடை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம், (MoHRE) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேரடியாக சூரியனுக்குக் கீழும், திறந்தவெளிகளிலும் செய்யப்படும் வேலைகளை ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரையிலான மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த மூன்று மாத காலத்திற்கும் மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையிலான நேரங்களில் திறந்தவெளிகளில் வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தால் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் இந்த முடிவின் படி, ஒரு தொழிலாளி மதியம் 12:30 மணியிலிருந்து மாலை 3:00 மணி வரையிலான நேரங்களில் வேலை செய்யக் கூடாது என்றும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளிகளுக்கு இந்த இடைப்பட்ட நேரங்களில் ஓய்வெடுக்க ஒரு நிழல் இடத்தை வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், தொழில்நுட்ப காரணங்களுக்காக தொடர வேண்டிய வேலைகளுக்கு அதற்குரிய நிறுவனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் கான்கிரீட் போடுவது, நீர் குழாய்கள், பெட்ரோல் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் அல்லது மின் இணைப்புகள் துண்டிக்கப்படுதல் போன்ற தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்திவைக்க முடியாத திட்டங்களில் தொழிலாளர்கள் பணிபுரிந்தால் தடைசெய்யப்பட்ட நேரங்களில் தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையின்படி, பொது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் தேவைகளுக்கு ஏற்ப குளிர்ச்சியான குடிநீரை வழங்க வேண்டும், அத்துடன் தாகம் தணிக்கும் பொருட்களையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மேலும், பணியிடங்களில் முதலுதவி பெட்டி போன்றவற்றை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சகம் அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத எந்தவொரு நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வேலையை தொடரும் நிறுவனத்திற்கு ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம்ஸ் என அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் தடையின் போது பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அதிகபட்சம் 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விதிகளை நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை ஆராய அவ்வப்போது கள ஆய்வுகள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் என்றும் விதிகளை மீறி இயங்கும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel