அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 11 முதல் புதிய முனையத்திற்கு மாறும் திருச்சி விமான நிலையம்..!! விமான நிறுவனம் அறிக்கை வெளியீடு..!!

திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் முனையமானது (passenger terminal) இன்னும் ஓரிரு நாட்களில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது. மேலும், பழைய பயணிகள் முனையத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சேவைகளும் முழுமையாக புதிய முனையத்திற்கு மாற்றப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா (Air Asia) அதன் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் 11 ஜூன் 2024 அன்று காலை 6.00 மணி முதல் திருச்சி விமான நிலையம் (TRZ) செல்லும் மற்றும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்திற்கு (New Integrated Terminal Building -NITB) செயல்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், செக்-இன், போர்டிங் மற்றும் பேக்கேஜ் க்ளைம் உள்ளிட்ட அனைத்து ஏர் ஏசியா செயல்பாடுகளும் புதிய முனையத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேசமயம், புதிய முனைய கட்டிடத்தில் AirAsia உட்பட அனைத்து விமான நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட செக்-இன் கவுன்டர்கள் இருக்காது என்பதால், திசை மற்றும் உதவிக்கு முனையத்தில் இருக்கும் தகவல் பலகையைப் பார்க்குமாறும் ஏர் ஏசியா பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், புதிய முனைய கட்டிடத்தில் உள்ள செக்-இன் கவுண்டர்கள் இயக்கத்தை குறைக்கவும் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட பயணிகள் எளிதாக பயணிப்பதற்கும், AirAsia MOVE ஆப் அல்லது airasia.com இணையதளத்தில் முன்பதிவுகள் உட்பட  ஆன்லைனில் சுய செக்-இன் செய்யுமாறும் ஏர் ஏசியா விமான நிறுவனம் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்குமாறும், கூடுதல் விசாரணைகள் அல்லது உதவிக்கு Ask Bo மூலம் விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்பு கொள்ளுமாறும் ஏர் ஏசியா திருச்சி விமான நிலையம் செல்லும் பயணிகளை வலியுறுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தின் இந்த புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடமானது பழைய முனையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எனவே, அனைத்து பபயணிகளும் புதிய முனையத்திற்கு வந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், பழைய முனையத்திற்கு கவனக்குறைவாக வருபவர்களுக்கு விமான நிலையம் ஷட்டில் சேவையை  ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் சுமார் 1100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலைய முனையமானது கடந்த ஜனவரி மாதம் இந்திய பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த புதிய சர்வதேச முனையம் ஆண்டுதோறும் 44 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்கும், பீக் ஹவர்ஸில் சுமார் 3,500 பயணிகளுக்கும் சேவை செய்யும் திறன் கொண்டதாகும்.

அத்துடன், 60 செக்-இன் கவுண்டர்கள், 5 பேக்கேஜ் டெர்மினல்கள், 60 இமிகிரேஷன் கவுண்டர்கள் மற்றும் 44 புறப்படும் குடியேற்ற கவுண்டர்கள் என விமான பயணிகளுக்கு எளிதான மற்றும் விரைவான சேவை வழங்கும் வகையில் புதிய டெர்மினல் கட்டிடத்தில் பல்வேறு அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, துபாய், அபுதாபி, ஷார்ஜா, மஸ்கட், மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு இடங்களுக்கு விமான சேவையை வழங்கி வரும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம், சர்வதேச பயணிகள் போக்குவரத்தில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான நிலையமாக உருவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!