அமீரக செய்திகள்

குளோபல் வில்லேஜ்: மற்ற எமிரேட்டுகளில் இருந்து பேருந்தில் எப்படி செல்லலாம்..?? இலவச மற்றும் கட்டண பார்க்கிங் இடங்கள் குறித்த விபரங்கள்.!!

துபாயின் மிகவும் பிரபலமான பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜின் 29வது சீசன் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதியன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனில் கூடுதல் இடங்கள், புதிதாக மூன்று பெவிலியன்கள், கலாச்சார அரங்குகள் மற்றும் ரெஸ்டாரன்ட் பிளாசா போன்றவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

குளோபல் வில்லேஜுக்கான நுழைவுச் சீட்டுகள் 25 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குகின்றன. இந்த டிக்கெட்டுகள் குளோபல் வில்லேஜின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.globalvillage.ae) இப்போது கிடைக்கிறது. மேலும், இந்த சீசனுக்கான டிக்கெட் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சீசனில், ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் 22.50 திர்ஹம்ஸில் வார நாள் டிக்கெட்டுகளை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒரு சிலருக்கு குளோபல் வில்லேஜிற்கு செல்வது சிலருக்கு சவாலாக இருக்கலாம். குறிப்பாக பார்க்கிங் இடத்தைக் கண்டுபிடிப்பது என்பது சிரமமாக இருக்கும். குளோபல் வில்லேஜில் கிடைக்கக்கூடிய பார்க்கிங் விருப்பங்கள் மற்றும் அவற்றின் கட்டணங்கள் பற்றிய விவரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

பார்க்கிங் பகுதிகள் மற்றும் கட்டணங்கள் 

நீங்கள் உங்களுடைய காரில் குளோபல் வில்லேஜுக்கு சென்றால், அதை எங்கு நிறுத்துவது என்று யோசித்தால், அந்த இடத்தில் 20,000 பார்க்கிங் இடங்கள் உள்ளன. முக்கியமாக 150 திர்ஹம்ஸ்க்கு, புத்தம் புதிய ஹேப்பினஸ் கேட் முன் புதிய வாலட் பார்க்கிங் சேவையையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

பொது பார்க்கிங்: இலவசம்

விஐபி பார்க்கிங்: விஐபி பேக்குகள் வைத்திருப்பவர்கள் தங்கள் கார்களை முன்பே பதிவு செய்ய வேண்டும் (விஐபி பேக்குகள் இல்லாதவர்கள் இந்த பகுதியில் ஒரு நாளைக்கு 200 திர்ஹம்ஸுக்கு பார்க்கிங் செய்யலாம்)

கட்டண பார்க்கிங்: ஒரு நாளைக்கு 120 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நீங்கள் மூன்று நுழைவாயில்களிலிருந்து வெகு தொலைவில் நிறுத்தியிருந்தால், கவலைப்பட வேண்டாம். பார்வையாளர்கள் ஆட்டோரிக்‌ஷாக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இது அவர்களின் பார்க்கிங் பகுதியிலிருந்து நுழைவு வாயிலுக்கு அழைத்துச் செல்லும், ஒரு நபருக்கு 5 திர்ஹம்ஸ் வசூல் செய்யப்படும்.

குளோபல் வில்லேஜுக்கு செல்லும் பேருந்துகள்

உங்களிடம் கார் இல்லையென்றால், நீங்கள் ஒரு டாக்ஸி அல்லது பஸ் மூலம் குளோபல் வில்லேஜிற்கு செல்லலாம். துபாயிலிருந்து குளோபல் வில்லேஜுக்கு பேருந்தில் எப்படி செல்வது என்பது குறித்த வழிகாட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

துபாய் பேருந்து சேவைகள்

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) குளோபல் வில்லேஜிற்கான பின்வரும் வழிகளை அறிவித்துள்ளது:

  • ரஷிதியா மெட்ரோ நிலையத்திலிருந்து பேருந்து 102.
  • யூனியன் மெட்ரோ நிலையத்திலிருந்து அல் ரெபாத் ஸ்ட்ரீட் வழியாகச் செல்லும் பேருந்து 103.
  • குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அல் ஜாஃபிலியா மெட்ரோ நிலையம் வழியாகச் செல்லும் பேருந்து 104.
  • மால் ஆஃப் எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து பேருந்து 106, அல் பர்ஷா A2, அல் பர்ஷா லுலு சூப்பர் மார்க்கெட், துபாய் அமெரிக்கன் அகாடமி 2, கிளாசிக் கிரிஸ்டல் 2 மற்றும் அல் குவோஸ், கிளினிக்கல் பேத்தாலஜி சர்வீசஸ் 2 வழியாகச் செல்கிறது.
  • அல் நஹ்தா 1 பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து 107.

சேவை நேரங்கள்

தினமும் மதியம் 3.15 மணி முதல் இரவு 11.15 மணி வரை, 30 நிமிட பயண நேரம்.

அஜ்மான் பேருந்து சேவை

இந்த மாத தொடக்கத்தில், அஜ்மானின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுக்கான புதிய பேருந்து சேவையை அக்டோபர் 16 அன்று தொடங்கியது.

குளோபல் வில்லேஜ் வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த பேருந்து சேவைக்கான டிக்கெட்டுகளின் விலை தலா 25 திர்ஹம்ஸ் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் மசார் கார்டைப் (Masaar Card) பயன்படுத்தி இந்த குளோபல் வில்லேஜ் பயணத்தை அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

புதிய பேருந்து சேவையானது, அல்-முசல்லா நிலையத்திலிருந்து புறப்பட்டு குளோபல் வில்லேஜுக்கு செல்லும், மீண்டும் அங்கிருந்து அல் முசல்லா நிலையத்திற்குத் திரும்பும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்று பேருந்துகள் அஜ்மானில் உள்ள அல்-முசல்லா நிலையத்திலிருந்து குளோபல் வில்லேஜுக்கும், மேலும் மூன்று பேருந்துகள் குளோபல் வில்லேஜிலிருந்து அஜ்மானுக்கும் புறப்படும்.

மேலும், அஜ்மானிலிருந்து சரியாக மதியம் 2.15 மணிக்கும் கடைசியாக மாலை 6.15 மணிக்கும் புறப்படும். அதேபோல், வார நாட்களில் குளோபல் வில்லேஜிலிருந்து முதல் பயணம் பிற்பகல் 3.45 மணிக்கும், கடைசியாக நள்ளிரவு 12.30 மணிக்கும் புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வார இறுதியில், குளோபல் வில்லேஜிலிருந்து கடைசிப் பயணம் அதிகாலை 1.30 மணிக்குப் புறப்படும்.

வார நாட்களில் பேருந்து சேவையின் நேர அட்டவணை

  • அஜ்மானில் உள்ள அல் முசல்லா ஸ்டேஷன்: பிற்பகல் 2.15, மாலை 4.45 மற்றும் மாலை 6.15
  • குளோபல் வில்லேஜ்: மாலை 3.45 மணி, இரவு 10.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணி

வார இறுதி நாட்களுக்கான அட்டவணை:

  • அஜ்மானில் உள்ள அல் முசல்லா ஸ்டேஷன்: பிற்பகல் 2.15, மாலை 4.45 மற்றும் மாலை 6.15
  • குளோபல் வில்லேஜ்: மாலை 3.45 மணி, இரவு 10.30 மற்றும் நள்ளிரவு 1.30 மணி

ராஸ் அல் கைமா பேருந்து சேவை நேரங்கள்

அக்டோபர் 18, 2024 முதல் வார இறுதி நாட்களில் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) குளோபல் வில்லேஜ்  மற்றும் ராஸ் அல் கைமா இடையே பொதுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருபுறமும் பயணம் செய்ய 30 திர்ஹம் செலவாகும்.

ராஸ் அல் கைமாவில் இருந்து குளோபல் வில்லேஜுக்கு பேருந்து பிற்பகல் 3 மணிக்கும் மாலை 5 மணிக்கும் புறப்படும். அதேசமயம், ராஸ் அல் கைமாவிற்கு திரும்பும் பேருந்து குளோபல் வில்லேஜிலிருந்து இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12 மணிக்கும் புறப்படும்.

குளோபல் வில்லேஜ் நேரங்கள்

ஞாயிறு முதல் புதன் வரை: மாலை 4 மணி முதல் 12 மணி வரை செயல்படும்.

வியாழன் முதல் சனி மற்றும் பொது விடுமுறை நாட்கள்: மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை

உத்தியோகபூர்வ பொது விடுமுறை நாட்களைத் தவிர, செவ்வாய் கிழமைகள் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!