துபாயில் வரலாறு படைத்த தங்கத்தின் விலை..!! 300 திர்ஹம்ஸை கடந்த 22 காரட் தங்கம்..!!

உலகளவில் தங்கத்திற்கு பெயர் பெற்ற துபாயில் இன்று வியாழக்கிழமை அக்டோபர் 17ம் தேதி நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலையானது கிடுகிடுவென உயர்ந்து கிராம் ஒன்றுக்கு 300 திர்ஹம்ஸை தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துபாய் ஜூவல்லரி குழுமம் வெளியிட்ட தரவுகளின் படி, 24 காரட் வகை தங்கம் புதன்கிழமையன்று ஒரு கிராம் 323.75 திர்ஹம்ஸ்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை கிராமுக்கு 324.25 திர்ஹம்ஸாக உயர்ந்துள்ளது.
மேலும், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையிலிருந்து 0.50 திர்ஹம்ஸ் அதிகரித்து இதுவரை இல்லாத அளவில் 300 திர்ஹம்ஸை தாண்டியுள்ளது. அதாவது 22 காரட் தங்கத்தின் விலை 300.25 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 20 காரட் மற்றும் 18 காரட் ஆகியவை முறையே ஒரு கிராமுக்கு 290.75 திர்ஹம்ஸ் மற்றும் 249.25 திர்ஹம்ஸாக உயர்ந்துள்ளது.
UAE நேரப்படி, காலை 9.10 மணியளவில் உலகளவில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.17 சதவீதம் அதிகரித்து 2,678.58 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு நாணய இயக்கவியலைக் காட்டிலும் தங்கத்திற்கான உண்மையான தேவையை பிரதிபலிப்பதாகவும், அமெரிக்கப் பொருளாதாரக் கண்ணோட்டத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை தங்கத்தின் விலையைத் தொடர்ந்து உயர்த்துகின்ற நிலையில், அக்டோபர் இறுதிக்குள் இது 2,700 டாலரை எட்டிவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஏற்ற இறக்கம் மற்றும் தெளிவற்ற பணவியல் கொள்கைகளுக்கு மத்தியில், கடும் உயர்வை கண்டுள்ள தங்கத்தின் விலையானது, உலகளவில் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கித் தள்ளுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel