அமீரக செய்திகள்

துபாய்: 1,700 திர்ஹம்ஸிற்கு தவறுதலாக 17,000 திர்ஹம்ஸ் பணம் செலுத்திய வாடிக்கையாளர்!! 15,000 திர்ஹம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த டெலிவரி ரைடருக்கு குவியும் பாராட்டு…

சமீபத்தில் துபாய்க்கு குடிபெயர்ந்த கஜேதன் ஹப்னர் (Kajetan Hubner) என்ற போலந்து நாட்டைச் சேர்ந்தவர், 1,700 திர்ஹம்ஸ் மட்டுமே செலவாகும் ஒரு டெலிவரிக்கு தவறுதலாக 17,000 திர்ஹம்ஸ் அதிகமாகச் செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, டெலிவரி ரைடர் ஏறக்குறைய 15,000 திர்ஹம்ஸ் பணத்தை நேர்மையாக அவரிடம் திரும்பக் கொடுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

டெலிவரி ரைடரின் நேர்மை

துபாயில் ‘Noon’ டெலிவரி ரைடராகப் பணிபுரியும் முஹம்மது மொஹ்சின் நசீர் என்பவர், அன்றைய டெலிவரிகளை முடித்ததும் டெலிவரி ஆர்டரை சரிபார்த்து, பணத்தை எண்ணிப்பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

அதில் கூடுதல் பணம் இருந்ததால், ஏதேனும் தவறுதலாக அல்லது வாடிக்கையாளர் பெரிய டிப்ஸ் கொடுத்தாரா என்று பல வழிகளில் யோசித்து குழப்பமடைந்திருக்கிறார். ஆனால் யாரும் அவ்வளவு டிப்ஸ் கொடுக்கவில்லை என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிகிறது.

அந்த சமயத்தில் அவருடைய தாயார் பாகிஸ்தானில் இருந்து அழைப்பு விடுத்ததாகவும், அவரிடம் தனது குழப்பத்தை விளக்கியதாகவும் கூறிய நசீர், கஜேதனைத் தொடர்பு கொண்டு உடனடியாக உறுதிப்படுத்துமாறும், வாடிக்கையாளரிடம்  சரிபார்க்காமல் அந்தப் பணத்திலிருந்து ஒரு திர்ஹம் கூட வைத்திருக்க வேண்டாம் என்றும் தாயார் அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அன்று மாலை கஜெதனுக்கு டெலிவரி செய்யப்பட்ட ஆர்டருக்கான 1,750 திர்ஹம்ஸ் பணத்தை ‘Noon’ கணக்கில் டெபாசிட் செய்த நசீர், மறுநாள் கஜேதனைத் தொடர்பு கொண்டு மீதமுள்ள பணத்தைத் திருப்பி ஒப்படைத்துள்ளார்.

தவறுதலாக கூடுதல் பணம் கொடுத்த வாடிக்கையாளர்

இச்சம்பவம் குறித்து கஜேதன் பகிர்ந்த போது, துபாய் மெரினாவில் குடியேறுவதற்காக வீடு தேடிக் கொண்டிருந்ததால், ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அப்போது அக்கம்பக்கத்தைச் சுற்றி வர ஒரு இ-ஸ்கூட்டரை நூன் ஆப் மூலம் ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவர் துபாய்க்கு புதியவர் என்பதால், அவர் ‘கேஷ் ஆன் டெலிவரி’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதன்பிறகு, அவரது ஆர்டரை நசீர் டெலிவரி செய்ய வந்தபோது, ​​அவர் மிகவும் கவனத்துடன் கொண்டு வந்ததாகவும், அப்போது, ஆர்டருக்கான 1,750 திர்ஹம்சை செலுத்துவதற்கு பதிலாக, தவறுதலாக 17,050 திர்ஹம்சை செலுத்தியதாகவும் கஜேதன் கூறுகிறார்.

கஜேதன் தொடர்ந்து பேசிய போது, “நான் தவறுதலாக கூடுதல் பணத்தை அவரிடம் கொடுத்தேன், ஆனால் அவர் அதை எண்ணவில்லை. மதிய உணவு நேரத்தில் தான் பணம் காணாமல் போனதை கவனித்தேன். அதைக் கண்டுபிடிக்க முடியாததால், மனமுடைந்தேன். அப்போதுதான் டெலிவரி ரைடரிடம் இருந்து கூடுதல் பணம் பற்றிய செய்தி வந்தது” என்று விவரித்துள்ளார்.

நேர்மைக்கு கிடைத்த வெகுமதி

இறுதியாக, அன்று மதியம் டெலிவரி ரைடர் பணத்தை கஜேதனிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அப்போது, டெலிவரி ரைடரின்  நேர்மையைப் பாராட்டி,  கஜேதன் 300 திர்ஹம் பணத்தை அவருக்கு வெகுமதியாக கொடுத்திருக்கிறார், ஆனால் அவர் அதை எடுக்க மறுத்து, தனது உண்மையான வெகுமதி இறைவனிடம் உள்ளது என்றும், பணத்தைத் திருப்பித் தருவது தனது கடமை என்றும் கூறியிருக்கிறார்.

இந்த காட்சிகளை, கஜேதனின் காதலி படம்பிடித்து, முகமதுவின் அனுமதியுடன் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிற நிலையில், நூன் நிறுவனம் ரைடரின் நேர்மைக்கு வெகுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!