துபாயில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தியர்.. 43 வருடம் ஒரே நிறுவனத்தில் வேலை..!! யார் அவர்..??

தனது சொந்த நாட்டையும், குடும்பத்தினர்களையும் விட்டு வாழ்வாதாரம் தேடி மற்ற நாடுகளுக்கு செல்வது என்பது இன்று மட்டுமல்ல, பல காலம் முதலே தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு நிகழ்வாகும். அவ்வாறு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி ஐக்கிய அரபு அமீரகம் வந்து தற்போது அரை சதத்தை கடந்துள்ளார் ஒரு அமீரக குடியிருப்பாளர்.
துபாயில் வசித்து வரும் 72 வயதான K.P. முகம்மது என்ற இந்திய வெளிநாட்டவர்தான் துபாயில் குடியேறி வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், அவர் பதிவு செய்துள்ள குறிப்பிடத்தக்க மைல்கல்லை இந்த மாதம் தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த முகமது, அக்டோபர் 19, 1974 அன்று, ராடோ (Rado) வாட்ச்களின் ஒரே விநியோகஸ்தரான ஓரியண்டல் ஸ்டோர்ஸில் பணிபுரிய அவரது மாமா வழங்கிய விசாவில் எமிரேட்டுக்கு வந்து, 43 வருடங்கள் தொடர்ச்சியாக அதே நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இதனால் அவரது பெயர் ‘ராடோ முகமது’ என்று அழைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது 22வது வயதில், துபாய்க்கு வந்த முகமது வெற்றிகரமாக தற்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, துபாயில் அவரது 50 ஆண்டுகால வாழ்கை எப்படி இருந்தது என்பது பற்றியும், துபாயில் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் அவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு சுவாரஸ்சியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
துபாய் குறித்து அவர் நினைவுகூர்ந்த போது, “நான் முதன்முதலில் வந்தபோது, அங்கு கடல் துறைமுகம் இல்லை, ஒரு துறைமுகம் மட்டுமே இருந்தது. சரியான உள்கட்டமைப்பு இல்லை, ஆனால் ஒவ்வொரு தசாப்தத்திலும், நகரம் முன்னோடியில்லாத வளர்ச்சியைப் பதிவுசெய்து உலகளவில் அதன் அடையாளத்தை உருவாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் பணிபுரிந்த கடையில், அதுவரை பரிவர்த்தனைகள் கைமுறையாக தாக்கல் செய்யப்பட்டு வந்ததாகவும், 1994 ஆம் ஆண்டில் இருந்து கணினிகள் பயன்படுத்தத் தொடங்கியதாகவும், அந்த புதிய தொழில்நுட்பத்தை அவர் விரைவாக கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1980 இல் ஆயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட முகம்மது, பர் துபாயின் முசல்லா பகுதியில் ஒரு சாதாரண இரண்டு படுக்கையறை அடுக்குமாடி குடியிருப்பில் அவரது மனைவியுடன் குடியேறியுள்ளார். இப்போது இவரது இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகிய மூவரும் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
துபாய்க்கு நன்றி!!
இப்போது, முகமது அவர்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்று எட்டு வருடங்களாகி விட்ட நிலையில், தனது மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் மற்றும் ஐந்து பேரக்குழந்தைகள் என அவர் குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தை செலவிட்டு வருவதாக தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “வாழ்வாதாரம் தேடி வந்தேன், இப்போது எனது குழந்தைகளும் இதே நகரத்தில் தங்கள் குடும்பங்களுடன் உயர் தகுதி மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர்” என்று முகம்மது கூறியுள்ளார். UAE அவருக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இங்கு வராமல் இருந்திருந்தால் இது சாத்தியமில்லை என்றும் முகம்மது தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel